கொட்டித் தீர்த்த கனமழை.. எண்ணூரில் 26 செ.மீ. பதிவு

கொட்டித் தீர்த்த கனமழை.. எண்ணூரில் 26 செ.மீ. பதிவு

'டிட்வா' புயல் காரணமாக, அதிகபட்சமாக எண்ணூரில் 26 செ.மீ மழையும், சென்னை பாரிமுனை 25 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா புயல்’ சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் விளைவாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், நள்ளிரவுக்குக் பிறகு பரவலாக மிதமான மழை பெய்தது. தொடர்ந்து, இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் பலத்த மழை பெய்து, தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 134 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 26 செ.மீ, சென்னை பாரிமுனையில் 25 செ.மீ, ஐஸ் ஹவுஸில் 22 செ.மீ, பொன்னேரியில் தலா 21 செ.மீ, பேசின் பிரிட்ஜில் 20 செ.மீ; மணாலியில் 19 செ.மீ; வடபழனி மற்றும் மேடவாக்கம் சந்திப்பில் தலா 18 செ.மீ பதிவாகியுள்ளது.

மேலும், சாலிகிராமம், சைதாப்பேட்டையில் 16 செ.மீ; பெரம்பூர், அமிஞ்சிக்கரையில் 15 செ.மீ; அடையார் 14 செ.மீ; காசிமேடு, வேளச்சேரி, அண்ணா பல்கலைக்கழகம் தலா 13 செ.மீ; ஒய்எம்சிஏ நந்தனம், வளசரவாக்கம், மாதவரம், புழல், கொரட்டூர் பகுதிகளில் தலா 12; சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகர், பள்ளிக்கரணை பகுதிகளில் தலா 11 செ.மீ பதிவாகியுள்ளது.