"நாங்கள் அரசியல் கட்சி இல்லை" - ஓபிஎஸ் பேட்டி
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், நாங்கள் அரசியல் கட்சி இல்லை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சிகளில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, திமுகவில் இணைந்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த வழக்கறிஞர் சுப்புரத்தினம், அன்வர் ராஜா, மருது அழகுராஜ் ஆகியோர் திமுகவில் இணைந்தார். இன்னும் சிலர் வேறு கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த வரிசையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார்.
அதற்காக, அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்த ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை நேரில் வழங்கினார்.
திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “அதிமுகவில் இருந்து நான் விலகினாலும் அண்ணா ஆரம்பித்த தாய் கழகத்தில் தான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். திமுகவில் இணைய நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. திமுகவில் இருந்து வந்தது தான் அதிமுக. அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. அங்கு சர்வாதிகாரம் நடக்கிறது” எனக் குற்றஞ்சாட்டிய அவர், அங்கிருந்து இன்னும் சிலர் திமுகவுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக, விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “இந்த கேள்வியை நீங்கள் வைத்திலிங்கத்திடம் தான் போய் கேட்க வேண்டும்” என பதிலளித்தார். தொடர்ந்து, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று கூறியிருந்தீர்களே? என்று கேட்டதற்கு, “ஆமாம் தை மாதத்தில் இன்னும் 25 நாட்கள் உள்ளன. ஆகையால், பொறுத்திருங்கள்” என்றார்.
மேலும், அரசியலில் சரியான முடிவு எடுக்காத காரணத்தினால் தான் உங்களின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராகப் பிரிந்து சென்று மாற்றுக் கட்சியில் இணைகிறார்கள் என்ற ஒரு பேச்சு இருக்கிறதே என்ற கேள்விக்கு, “எந்த கட்சி, நாங்கள் அரசியல் கட்சி இல்லை” எனப் பதிலளித்து விட்டு கிளம்பினார்.