சபரிமலையில் அலைமோதும் கூட்டம்.. 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய்

சபரிமலையில் அலைமோதும் கூட்டம்.. 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய்

சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு பூஜை தொடங்கிய 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு கடந்த 16 ஆம் தேதி மண்டல - மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நடப்பண்டிற்கான மண்டல பூஜை வருகிற 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, அன்று இரவு நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு யாத்திரைக்காக 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். தொடர்ந்து, மகர விளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பக்தர்கள் 19 ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்யலாம். பின்னர் 20 ஆம் தேதி நடை அடைக்கப்படுகிறது.

இந்த நிலையில், மகர விளக்கு பூஜை தொடங்கிய நாளில் இருந்து நவம்பர் மாத கடைசி வரை ரூ.92 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆரம்ப நாட்களில் ஐயப்ப பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தை சீர்படுத்துவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், கிரவுட் சிஸ்டம் மேனேஜ்மென்ட் (Crowd System Management) மற்றும் ஸ்பாட் புக்கிங் (Spot booking) முறையில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ரூ.92 கோடி காணிக்கை

இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை காலத்தின் முதல் 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.69 கோடி மட்டுமே கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 33.33 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், சபரிமலை அரவணை பிரசாதம் மூலம் ரூ.47 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அரவணை விற்பனை ரூ.32 கோடி இருந்த நிலையில், தற்போது 46.86 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அப்பம் ரூ.3.5 கோடி விற்பனையாகியுள்ளது.

மேலும், உண்டியல் காணிக்கையாக 15 நாட்களில் ரூ.26 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு காணிக்கையாக ரூ.22 கோடி கிடைத்த நிலையில், நடப்பாண்டு 18.18 சதவீதம் உண்டியல் காணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து, இந்த 15 நாட்களில் 13 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்’ என தெரிவித்துள்ளது.