இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் ஓபிஎஸ்?
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், முக்கிய அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடவுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக தரப்பில் இருந்து முக்கியத்துவம் குறைந்ததாகக் காணப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தும், அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது வரை கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருக்கிறார். அதேநேரம், பாரதிய ஜனதாவின் அழைப்பின்பேரில் தனது மகனுடன் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் முகாமிட்டிருந்த ஓபிஎஸ், பாஜகவை சேர்ந்த மற்ற தலைவர்களை சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.
அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அப்போது தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் சூழ்நிலை குறித்து உள்துறை அமித் ஷாவிடம் விவாதித்ததாகவும் ஓபிஎஸ் கூறினார். ஆனால், ஓபிஎஸ்ஸை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படும் நிலையில், அதிமுகவை ஒன்றிணைத்தால் மட்டுமே அது சாத்தியம் என அமித் ஷாவிடம் ஓபிஎஸ் நிபந்தனை விதித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுக ஒன்றிணைப்பு நிறைவேறும் வரை, தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேரப் போவதில்லை என்று அமித் ஷாவிடம் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாகப் பெயர் மாற்றம் செய்த ஓபிஎஸ், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரியில் இன்று மாலை 5 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.