"மோடியும், அமித்ஷாவும் விஷப்பாம்புகள்" - ஆ. ராசா பேச்சு
பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விஷப்பாம்புகள் என திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா விமர்சித்தார்.
மேலும், அவர்களின் விஷத்தை முறிப்பதற்கான ஒரே இடம் தமிழ்நாடு மட்டும்தான் என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "தமிழ்நாடு அடுத்த இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காக நமது முதலமைச்சர் மேற்கொண்டு வரும் செயல்கள் அளப்பரியது. அதற்காக அவரை தமிழக மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும். தமிழக மக்களுக்காக அவர் நலமுடன் வாழ வேண்டும்.
தமிழ் இனத்துக்காக, தமிழ் மொழிக்காக, அனைத்து தரப்பு மக்களுக்காகவும் செயல்பட்டவர் கருணாநிதி. திருநங்கைகளுக்காகவும் சிந்தித்தவர், கவலைப்பட்டவர் அவர். ஒரே ஒரு பெயர் மாற்றத்தின் மூலம் திருநங்கைகள் சந்தித்து வந்த அவலத்தை ஒழித்துக் காட்டியவர்.
மக்களிடையே இருக்கும் வேற்றுமையை அவர் அங்கீகரித்தார். வேற்றுமையை அங்கீகரித்தால் மட்டுமே நல்லுறவு ஏற்படும். வேற்றுமையை அங்கீகரிக்காமல் விட்டால் பிளவு ஏற்படும். இதை மறைந்த பிரதமர் நேருவும் உணர்ந்திருந்தார். அதனால்தான் அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அம்சங்கள் எல்லாம் இருந்ததன. சாதி, மத வேறுபாடுகளை களைந்து, அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் நமது அரசியலமைப்பு சட்டம்தான்.
இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு, மோடி பிரதமர் ஆனதுமே ஆபத்து ஏற்பட்டுவிட்டது. இன்றைய சூழலில், எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும் மோடியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், அதற்கான தகுதியும், தத்துவமும் அவர்களிடம் இல்லை. அவர்களை எதிர்க்கும் தத்துவமும், தகுதியும் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.
இந்த தத்துவத்தை தந்தவர் அண்ணாவும், பெரியாரும்தான். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் விஷப்பாம்புகள். பாம்பை அடிக்கும் தடியும், விஷத்தை முறிக்கும் மருந்து இருக்கும் இடமும் உள்ள ஒரே இடம் தமிழ்நாடுதான். பாம்பின் விஷத்தை தடுக்கும் ஒரே வைத்தியர் நமது முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தான்.
இந்தியாவையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் காப்பாற்ற இன்றைக்கு மு.க. ஸ்டாலின் தேவைப்படுகிறார். இந்த ஒரு மனிதர் மட்டும் இல்லை என்றால், இந்தியா என்றைக்கோ வேட்டைக் காடாக மாறியிருக்கும். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.
உங்கள் தலைவரை விட்டால், இந்தியாவை காப்பாற்ற வேறு ஆள் இல்லை என்று பாஜகவினரே என்னிடம் சொல்கிறார்கள். மு.க. ஸ்டாலின் இருந்தால்தான் அரசியலமைப்பு சட்டம் இருக்கும். அரசியலமைப்பு சட்டம் இருந்தால்தான் இந்தியா இருக்கும். அதற்காக அவர் நீடுழி வாழ வேண்டும் என்று வாழ்த்துங்கள்" என ஆ. ராசா பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.