2026 மட்டும் அல்ல... 2029 தேர்தலிலும் தனித்தே போட்டி: சீமான் உறுதி!

2026 மட்டும் அல்ல... 2029 தேர்தலிலும் தனித்தே போட்டி: சீமான் உறுதி!

2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ‘உரையாடல் அமர்வு’ நிகழ்ச்சி  சென்னை அசோக் நகரில் நடைபெற்றது.

அரசியல் என்றால் என்ன?

அப்போது மேடையில் பேசிய சீமான், “தவெக - திமுக இடையே தான் போட்டி என்று தம்பி விஜய் கூறுகிறார். அப்படியானால், விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு இடைத்தேர்தலின் போது எங்கே சென்றார்கள். அந்தவகையில், உண்மையான போட்டி நாதக - திமுக இடையேதான்.

தமிழ்நாட்டுக்குள் திராவிடமா? தமிழரா? என்ற இரண்டு கருத்தியல் போட்டிதான் நிலவுகிறது. மறுபுறம், பாஜகவுக்கு மும்மொழிக்கொள்கை. திமுகவுக்கு இருமொழிக் கொள்கை. எனக்கு ஒரே மொழிக்கொள்கை தான் - தாய்மொழி தமிழ் . கருத்தியல் போரை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உயர்ந்த நோக்கமும், கொள்கையும் நிறைந்த கோட்பாடுதான் அரசியலே தவிர வெறும் கூட்டம் அல்ல.

பெரியாரை எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் நாங்கள் யாரை எதிர்க்கிறோம் என்பது தெரியும். நாங்கள் எவருக்கும் சார்பாக வரவில்லை. மக்களுக்காக, மண்ணுக்கு சார்பாக தான் எங்கள் அரசியல் உள்ளது. சார்பு அரசியல், பதவி அரசியலில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அது எங்கள் இரத்தத்திலும் இல்லை. நாதக வெறும் கட்சி அல்ல.. மக்கள் ராணுவம்.

யாருடன் கூட்டணி?

எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன். இப்போது மட்டுமல்ல 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம். ‘தனித்து நிற்போம்.. தனித்துவத்தோடு நிற்போம்’ இறைவன் மீது ஆணையாக எவரோடும் கூட்டணி கிடையாது. 234 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் போட்டியிடும் ஒரே கட்சி நாதக தான்.

திமுகவை எதிர்த்தால் பாஜக காசு கொடுக்கிறது, ஆர்எஸ்எஸ்யின் கைக்கூலி என்கிறார்கள். பாஜகவை எதிர்த்தால், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களின் கைக்கூலி என்கிறார்கள். அதே அதிமுகவை எதிர்த்தால், திமுகவின் ‘பி’ டீம் என்கிறார்கள். திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை எதிர்த்தோம். தற்போதைக்கு தவெக தலைவர் தம்பி விஜயை நாங்கள் எதிர்க்கவில்லை. கேள்விகளை எழுப்பினால், விமர்சனம் என்று கூறுகிறார்கள். திமுகவின் ‘பி' டீம், திமுக காசு கொடுக்கிறது என்று கூறுகின்றனர். அப்படிக் கூறும் நபர்கள், அந்த காசை வாங்கிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

நாம் (நாதக) நினைத்திருந்தால் எப்போதோ, யாருடனோ கூட்டணி வைத்து பதவிகளை பெற்றிருக்க முடியும். பாஜக தனியாக நிற்கட்டும், நானும் தனியாக நிற்கிறேன். என்னை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கட்டும் பார்க்கலாம். அதேபோல திமுகவும் என்னோடு போட்டியிடட்டும். ஆனால், ஓட்டுக்குக் காசு கொடுக்காமல் வெற்றி பெற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து 8 சதவீதம் எப்போது 38 ஆக மாறும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மக்களும், இறைவனும் ஆசிர்வதித்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் 8% ஓட்டுக்கள் 38 ஆக மாறும். மக்கள் அரசியல் தெளிவோடு இருக்கிறார்களா? என்று கேட்பதை விட, அவர்களை தெளிவுபடுத்தும் கடமை நாம் ஒவ்வொருவருக்கும் உள்ளது” என்றார்.