நெல் கொள்முதல் செய்யவில்லை என எந்த இடத்திலும் புகார் இல்லை - துணை முதலமைச்சர் உதயநிதி!
எந்த இடத்திலும் நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன் பின்னர் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு எடுத்து செல்லப்படும். பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு அரவைக்காக தலா 2,000 டன் என மொத்தம் 4,000 டன் நெல் மூட்டைகள் ரயில் வேகன்கள் மூலம் அனுப்பும் பணிநடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு ரயில் வேகன்கள் மூலம் அனுப்பும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், '' திமுக அரசு விவசாயிகளுக்கு எப்போதும் துணை இருக்கும். நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் மாதம் முன்கூட்டியே நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
50 நாட்களில் 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் வைக்க இடங்கள் உள்ளன.
தொடர்ந்து பேசிய அவர், '' செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தாண்டு 2.5 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் பங்களிப்பை வேளாண் துறை வழங்குகிறது.'' என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் செல்வம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.