இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை! சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை! சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

பெண்கள் மட்டுமே ஓட்டுவதற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் அவை பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை கடந்த மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சமூக நலத்துறை கள ஆய்வு குழுவினர் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை சில ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இளஞ்சிவப்பு ஆட்டோகளை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த விதிகள் பற்றி இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கும் பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும், விதிகளுக்கு புறம்பாக ஆண்கள் ஓட்டி வருகிறார்கள். இந்நிலையில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இனி ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.