“வாக்காளர் திருத்தம்; ஊழியர்களுக்கு பணிச்சுமை இல்லை” - பிரேமலதா கருத்து
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று கூறியதாவது: மதுரை, கோவை போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும். அதேபோல, கூடுதல் எண்ணிக்கையில் வந்தே பாரத் ரயில்களையும் மத்திய அரசு இயக்க வேண்டும்.
வாக்கு திருட்டு எங்கும் நடைபெறக் கூடாது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. யாருடைய வாக்குரிமையையும் மறுக்கக் கூடாது. ஆரம்ப கட்டத்தில் பணியை முறைப்படுத்தாததால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டோருக்கு பணிச்சுமை இருப்பதாக புகார் எழுந்தது. தற்போது அதை முறைப்படுத்திவிட்டதால் பணிச்சுமை எதுவுமில்லை.
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். தேமுதிக இடம் பெற்றுள்ள கூட்டணி தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும். தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.