பாமக ஆர்ப்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞர்... திடீர் பரபரப்பு
பாமக சார்பில் நடைபெற்ற சாதி வாரி கணக்கெடுப்பு ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து பாமக அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காலை 11.45 மணியளவில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு, இட ஒதுக்கீடு கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாமக இளைஞரணி துணைச் செயலாளர் முருகன், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியவாறு மேடைக்கு பின்புறம் சென்று திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து செயல்பட்ட கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு அவரை தடுத்து, வாட்டர் பாட்டில்களில் இருந்த தண்ணீரை அவர்மீது ஊற்றி சமாதானப்படுத்தினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறையினரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதை வைத்து இட ஒதுக்கீட்டை அதிகரித்தல், தொழில் கடன் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பாமக வலியுறுத்தி வருகிறது.
தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போராட்டத்தை சென்னையில் நடத்தப்போவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று (டிச.17) போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
குறிப்பாக, அதிமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள பாமக அழைப்பு விடுத்திருந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோரை அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே. பாலு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அமமுக சார்பில் செந்தமிழன், பாஜக சார்பில் கரு நாகராஜன் மற்றும் புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் அதிமுக, தவெக சார்பில் இதுவரை யாரும் கலந்துகொள்ளவில்லை.