உயிர் மூச்சு உள்ளவரை விஜயை முதலமைச்சராக்க பாடுபடுவேன் - செங்கோட்டையன் சபதம்
எனது உயிர் மூச்சு உள்ளவரை விஜயை முதலமைச்சராக்க பாடுபடுவேன் என்று தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், '' அதிமுகவில் இருந்து 3 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எம்.ஜி.ஆர் என்னை அடையாளம் காட்டினார். கட்சி இருகூறுகளாக பிரிந்த நேரத்தில் கூட ஜெயலலிதாவுடன் உறுதுணையாக இருந்து பணியாற்றினேன். இன்று மக்கள் சக்தியாக இருக்கிற தவெக தலைவர், எவ்வளவு தடைகள் வந்தாலும், மக்கள் சக்தியின் மூலம் முதலமைச்சராக அரியணையில் அமர்வார்.
கோவை விமான நிலையத்தின் வெளியே என்னை வரவேற்க கூடியிருந்த தவெக தொண்டர்களுக்கு எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் ஈடில்லை. விஜய்யின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. அது மக்கள் சக்தியாக மாறியிருக்கிறது. விஜய் ஒரு மாற்றத்தை, புதிய சமுதாயத்தை, ஒரு நேர்மையான, புனிதமான ஆட்சியை உருவாக்க புறப்பட்டு இருக்கிறார். அவர் மக்கள் சக்தியோடு முதலமைச்சர் ஆவார்.
மக்கள் சக்தியை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது. ஆண்டுக்கு ரூ. 500 கோடி வருவாய் வந்தாலும் அதை தூக்கியெறிந்துவிட்டு, மக்களுக்கு சேவை செய்ய, புனித ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நான் இடம்பெற்றுள்ளேன். இவர்களுடன் சேர்ந்து என் உயிர் மூச்சு உள்ளவரை விஜயை முதலமைச்சராக்க பாடுபடுவேன்.
தவெகவில் இணைந்த பிறகும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே? என கேட்கிறார்கள். இங்கே ஜனநாயகம் இருக்கிறது. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். விஜயின் வாகனத்திலும் எம்.ஜி.ஆர், அண்ணா படம் இருக்கிறது. திராவிட இயக்கம் மீண்டும் உருவாக எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நின்று பணியாற்றினோம். மூன்றாவது தலைமுறையாக இவரை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க பணியாற்றுகிறோம். 9 முறை எம்.எல்.ஏவாக இருந்த என் பின்னால் மக்கள் இல்லை என அவர் (எடப்பாடி பழனிசாமி) சொல்லலாமே தவிர, அதை மக்கள் பார்த்து கொள்வார்கள்.
3 முறை வாக்கே கேட்காமல் என்னை வெற்றி பெற வைத்த மக்கள் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் சொல்லலாம். நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்பதை காட்டிவிடுவார்.'' என்று செங்கோட்டையன் கூறினார்.