தேசிய விளையாட்டு விருதுகள் 2025: பரிந்துரை பட்டியலில் கிரிக்கெட் வீரர்களுக்கு இடமில்லை
2025ஆம் ஆண்டின் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய ஹாக்கி அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் சிங் பெயர் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் விளையாட்டு துறையில் சிறந்த விளங்கும் வீரர்களை கவுரவிக்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் கேஎல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டு வருகின்றனர். இதில் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதானாது இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருதாகும். அதேசமயம் அர்ஜுனா விருதானது இந்தியாவின் இரண்டாவது உயரிய விளையாட்டு விருதாகும்.
அந்தவகையில் 2025ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுக்கான வீரர், வீராங்கனகளின் பரிந்துரை பட்டியலானது வெளியாகியுள்ளது. இதில் இம்முறை கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய ஹாக்கி அணியின் துணைக் கேப்டனும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான ஹர்திக் சிங் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டில் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரே நபராகவும் ஹர்திக் சிங் உள்ளார். இதற்கு முன் கேல் ரத்னா விருதை இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த 6 வீரர்கள் மட்டுமே பெற்றுள்ள நிலையில், அவர்கள் வரிசையில் தற்போது ஹர்திக் சிங்கும் இடம் பிடிக்கவுள்ளார்.
முன்னதாக தன்ராஜ் பிள்ளை (1999-2000), சர்தார் சிங் (2017), ரானி ராம்பால் (2020), பிஆர் ஸ்ரீஜேஷ் (2021), மன்பிரீத் சிங் (2021), ஹர்மன்ப்ரீத் சிங் (2024) ஆகியோர் மட்டுமே கேல் ரத்னா விருதை வென்றுளனர். இதில் கடந்தாண்டு இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கேல் ரத்னா விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் அர்ஜுனா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் தடகளம், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், போலோ விளையாட்டு, ஹாக்கி, செஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன் மற்றும் கபடி விளையாட்டைச் சேர்ந்த 24 பேர் இடம் பிடித்துள்ளார். மேலும் முதல் முறையாக யோகாசன பிரிவிலும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் யோகாசன வீராங்கனை ஆர்த்தி பால் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர் யோகாசனத்தில் தேசிய மற்றும் ஆசிய சாம்பியனாக உள்ளார். மேலும் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார். அதேபோல் இந்த முறை கிரிக்கெட் வீரர்களின் பெயர் இந்த பரிதுரை பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள வீரர்கள்: தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), பிரியங்கா (தடகளம்), நரேந்தர் (குத்துச்சண்டை), விதித் குஜ்ராத்தி (செஸ்), திவ்யா தேஷ்முக் (செஸ்), தனுஷ் ஸ்ரீகாந்த் (காதுகேளாதோர் துப்பாக்கிச் சுடுதல்), பிரணதி நாயக் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜித் (கபடி), நிர்மலா பாடி (கோ-கோ), ருத்ரன்ஷ் கண்டேல்வால் (பாரா-ஷூட்டிங்), ஏக்தா பயான் (பாரா தடகளம்), பத்மநாப் சிங் (போலோ), அரவிந்த் சிங் (ரோயிங், படகுப்போட்டி), அகில் ஷியோரன் (துப்பாக்கி சூடுதல்), மெஹுலி கோஷ் (துப்பாக்கி சுடுதல்), சுதிர்தா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சோனம் மாலிக் (மல்யுத்தம்), ஆர்த்தி பால் (யோகாசனம்), ட்ரீசா ஜாலி (பேட்மிண்டன்), காயத்ரி கோபிசந்த் (பேட்மிண்டன்), லால்ரெம்சியாமி (ஹாக்கி), முகமது அப்சல் (தடகளம்), பூஜா (கபடி).