தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல்... முக்கிய அப்டேட்
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடப்பாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக கூட்டணி எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் என திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. அதே போல, அதிமுகவும் தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அக்கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், தற்போது பாமக (அன்புமணி), அமமுக, புரட்சி பாரதம், தமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
இவற்றை தவிர, இந்த தேர்தலில்தான் விஜய்யின் தவெக, முதன்முதலாக களம் காண தயாராகி வருகிறது. மிகப்பெரிய இளைஞர் கூட்டத்தின் ஆதரவு, விஜய்க்கு இருக்கும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் அனைத்து கட்சிகளுக்குமே சவாலாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, அசாமை தவிர நடப்பாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரள, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைவரும் சென்று ஆய்வு செய்யவுள்ளனர். பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு பிறகு ஒவ்வொரு மாநிலமாக அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள் என இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் ஈடிவி பாரத் நிருபரிடம் தெரிவித்தன. அசாமில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மார்ச் மாதம் ஆய்வு மேற்கொள்வர்.
சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தேர்தலுக்கு ஆயத்தமாகி உள்ளனவா? தேர்தலை நியாயமான முறையில் நடத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள தேர்தல் அலுவலர்களுக்கு தெரிந்திருக்கிறதா? என்பன உள்ளிட்ட விஷயங்களை அதிகாரிகள் ஆய்வு செய்வர். அத்துடன், மாநிலங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள், அதிகாரிகளுடனும் அவர்கள் ஆலோசனை மேற்கொள்வார்கள் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததும், மேற்குறிப்பிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதியும் மார்ச் மாதம் தெரிந்துவிடும்.