‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்துக்கு இயக்குநர் தான் ஹீரோ: ஜீவா
நடிகர் ஜீவா, கதையின் நாயகனாக நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ஜன.15-ம் தேதி வெளியானது. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா, ஜெய்வந்த், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிதேஷ் சகாதேவ் இயக்கிய இப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்துள்ள இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் ஜீவா பேசும்போது, ”நாங்கள் கடந்த 4, 5 மாதங்களாகக் குமுளியில் ஒரு குடும்பமாகத் தங்கி இப்படத்தை எடுத்தோம். அங்கிருந்த மக்கள் கிடா வெட்டிச் சாமி கும்பிட்டு, இந்தப் படம் வெற்றி அடையும் என்று வாழ்த்தினார்கள். படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போது, கண்கலங்கி வழியனுப்பி வைத்தார்கள். இதன் வெற்றிக்கு அவர்களின் அன்பும் முக்கியக் காரணம்.
இயக்குநர் நிதேஷ் சகாதேவ்தான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. ஒவ்வொரு நடிகரிடமிருந்தும் நடிப்பை வெளிக்கொண்டு வந்து, காட்சிகளை அவ்வப்போது மெருகேற்றினார். ஒரு நடிகராக எனக்குத் தமிழில் ஒரு பெரிய வெற்றியை இப்படம் மூலம் கொடுத்திருக்கிறார். நடிகர் வி.டி.வி.கணேஷ்தான் இந்தக் கதையை சிபாரிசு செய்தார். தயாரிப்பாளர் கண்ணன் ரவியைச் சந்தித்தோம். அப்போதே அட்வான்ஸ் கொடுத்தார். அந்த நம்பிக்கை தான் இன்று வெற்றியாக மாறியிருக்கிறது” என்றார்.
இவ்விழாவில் தனது மகனை மேடையில் அறிமுகப்படுத்தினார் ஜீவா. அவருடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.