நள்ளிரவில் பசி எடுக்குதா? காரணம் என்ன தெரியுமா?
நல்ல உறக்கம் என்பது உடலுக்கும் மனதிற்கும் ஒரு ரீசெட் போன்றது. ஆனால், பலருக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது திடீரென பசி எடுத்து விழிப்பு வந்துவிடும். "இரவு நன்றாகத்தானே சாப்பிட்டோம், ஏன் மீண்டும் பசிக்கிறது?" என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.
இந்த நள்ளிரவு பசி என்பது வெறும் வயிற்று பிரச்சனை மட்டுமல்ல, அது உங்கள் வாழ்க்கை முறை, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் நீங்கள் உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்தது. இவ்வாறு நள்ளிரவில் விழிப்பு வருவது உங்கள் உறக்கத்தைக் கெடுப்பதுடன், அடுத்த நாள் முழுவதையும் சோர்வாக்கிவிடும். இந்த பசி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களையும், அதை தடுப்பதற்கான எளிய வழிமுறைகளையும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
ஏன் நள்ளிரவில் பசி எடுக்கிறது? மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இரவு நேர பசிக்கு பின்வரும் காரணங்கள் முக்கியமாக அமைகின்றன.
பகலில் போதிய உணவு உட்கொள்ளாமை: பகலில் வேலைப்பளு காரணமாகவோ அல்லது எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ மிகக் குறைவாக சாப்பிடுவது, இரவு நேரத்தில் உடலை அதிக பசிக்கு உள்ளாக்கும். உடல் தனது ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய நள்ளிரவில் பசி சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பும்.
புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைபாடு: உங்கள் இரவு உணவில் வெறும் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) மட்டுமே இருந்தால், அது விரைவில் ஜீரணமாகிவிடும். புரதமும் நார்ச்சத்தும் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும். இவை குறையும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாகக் குறைந்து பசி எடுக்கத் தொடங்கும்.
தூக்கமின்மை: தூக்கத்திற்கும் பசிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சரியாக தூங்காவிட்டால், உடலில் 'லெப்டின்' (பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்) குறைந்து, 'க்ரெலின்' (பசியைத் தூண்டும் ஹார்மோன்) அதிகரித்துவிடும். இது நள்ளிரவில் எதையாவது சாப்பிட தூண்டும் என NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது.
மன அழுத்தம் மற்றும் கவலை: மன அழுத்தம் ஏற்படும்போது உடலில் 'கார்டிசோல்' (Cortisol) ஹார்மோன் சுரக்கிறது. இது உடலில் சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் ஆவலைத் தூண்டும். பல நேரங்களில் இது உண்மையான பசியாக இருக்காது, மன அழுத்தத்திற்கான எதிர்வினையாக இருக்கும்.
இரவு நேர பசி நோய்க்குறி: இது ஒரு வகை உணவுக் கோளாறாகும். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அன்றாட உணவில் பெரும்பகுதியை இரவு நேரத்திலேயே உண்பார்கள். நள்ளிரவில் எழுந்தால் தவிர இவர்களால் மீண்டும் தூங்க முடியாது என்ற நிலை ஏற்படும்.
இரவு நேர பசியை தடுப்பது எப்படி?
- இரவு உணவில் காய்கறிகள், பருப்பு வகைகள் அல்லது இறைச்சி மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதை உறுதி செய்யுங்கள். இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து பசியைக் கட்டுப்படுத்தும்.
- தினமும் ஒரே நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது செரிமானத்திற்கு நல்லது.
- சில நேரங்களில் தாகம் எடுப்பதை உடல் பசி என்று தவறாகப் புரிந்து கொள்ளும். எனவே, நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
- தூங்குவதற்கு முன் மொபைல் போன் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்கவும். இதில் வெளிவரும் 'நீல ஒளி' தூக்க ஹார்மோன்களைப் பாதித்து பசியைத் தூண்டும்.
- ஒருவேளை தூங்குவதற்கு முன் பசித்தால், பிஸ்கட் அல்லது இனிப்புகளுக்குப் பதிலாக ஒரு கைப்பிடி நட்ஸ் அல்லது ஒரு சிறிய கப் தயிர் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
நள்ளிரவுப் பசி என்பது அவ்வப்போது ஏற்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் இது தொடர்கதையானால், அது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். சரியான நேரத்தில் சரிவிகித உணவு மற்றும் முறையான உறக்க முறையை பின்பற்றுவதன் மூலம், இந்த சிக்கலைத் தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வைப் பெற முடியும்.