பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா இங்கிலாந்து?

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா இங்கிலாந்து?

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மூன்றிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவு செய்து 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. மேலும் ஆஷஸ் கோப்பையையும் அந்த அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே ஆட்டமாக நாளை (டிசம்பர் 26) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெறும் உத்வேகத்துடன் களமிறங்க இருக்கிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியும் தோடர் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் விளையாடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இருந்து பாட் கம்மின்ஸ், நாதன் லையன் ஆகியோர் விலகிய நிலையில், அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இப்போட்டிக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. இந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் மைக்கேல் நேசர் மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், உஸ்மான் கவாஜாவும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். இதுதவிர நட்சத்திர வீரர்கள் டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர். ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் காயம் காரணமாக நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேசமயம் தொடர்ந்து ரன்களைச் சேர்க்க தவறி வரும் ஆலி போப்பும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஜேக்கப் பெத்தெல் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர பென் டக்கெட், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஹாரி ப்ரூக் உள்ளிட்ட நட்சத்திர பேட்டர்களும், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் போன்ற பந்துவீச்சாளர்களும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். ஏற்கெனவே தொடரை இழந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் இங்கிலாந்து அணி எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்று ஆறுதலை தேடுமா? என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பிட்ச் ரிப்போர்ட்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இதுவரை 119 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 58 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. அதேசமயம் 43 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதனால் போட்டியின் முடிவில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

நேருக்கு நேர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் 364 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி 154 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 112 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், 97 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

ஆஷஸ் டெஸ்ட் தொடரை பொறுத்தவரையில் இரு அணிகளும் 74 தொடர்களில் விளையாடியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 35 தொடர்களையும், இங்கிலாந்து அணி 32 தொடர்களையும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், 7 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரலை தகவல்கள்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் இத்தொடரை ஆன்லைனில் காண முடியும். இந்திய நேரப்படி போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடக்க இருக்கும் நிலையில், டாஸ் நிகழ்வானது 4.30 மணிக்கு நடைபெறும்.