தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் கிரிஷ் சோடங்கர் இன்று ஆலோசனை

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் கிரிஷ் சோடங்கர் இன்று ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிமுக கூட்டணி ஏறக்குறைய இறுதியாகிவிட்டது. சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக, பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிகள் பங்கீடு எண்ணிக்கையை ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதாகவும், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை நியமிக்காததால், கூட்டணிக் கட்சிகள் விரக்தியில் உள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் ஒருபடி மேலே சென்று, ‘திமுக எங்களை இன்னும் பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை’ என தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

இது ஒருபுறம் இருக்க, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது, பிரச்சார வியூகங்கள் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கிரிஷ் சோடங்கர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று ஆலோசனை நடத்துகிறார். இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

திமுக இன்னும் பேச்சுவார்த்தைக்குழு அமைக்காத நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக எந்த விவாதமும் நடத்தப்போவதில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. அதில் தேசிய தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடைபெற உள்ள பாதயாத்திரையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பங்கேற்க உள்ளார்.

மேலும் பிற தேசிய தலைவர்கள் பலர் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்க உள்ளனர். இவர்களின் பிரச்சார பயணத்தை திட்டமிடுவது, இவர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சேர்ப்பது போன்ற தேர்தல் பிரச்சார பணிகள், உட்கட்சி விவகாரங்கள் போன்றவை தொடர்பாகத் தான் ஆலோசிக்கப்பட உள்ளது என்றனர்.