லக்னோவில் அதிர்ச்சி : குரங்கு என உருவகேலி செய்த கணவன் ; உயிரை மாய்த்த மனைவி

லக்னோவில் ராகுல் சிங் உருவக்கேலி செய்ததால் மாடலிங் பெண் தன்னு சிங் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் அதிர்ச்சி : குரங்கு என உருவகேலி செய்த கணவன் ; உயிரை மாய்த்த மனைவி
உத்தர பிரதேசத்தில் உருவக்கேலி செய்த கோபத்தில் மாடலிங் பெண் ஒருவர், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேம் மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ராகுல் சிங். 28 வயதான இவரின் மனைவி தன்னு சிங், மாடலிங் துறையில் பிஸியாக இருந்து வந்துள்ளார். இந்த தம்பதி, தங்களது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் மாலையில் வீடு திரும்பியதும் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கணவர் விளையாட்டாக கூறிய ஒற்றை வார்த்தையால் தன்னு சிங் கண்கள் சிவந்துள்ளன.
உடனே, கோபித்துக் கொண்டு தனது பெட் ரூமுக்கு சென்றுள்ளார். அவர், தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்று குடும்பத்தினர் யாரும் சமாதானம் செய்யாமல் இருந்துள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் இரவு உணவு சாப்பிட அவரை அழைத்துள்ளனர். ஆனால், பெட் ரூமுக்குள் இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு, தன்னு சிங் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்தை கண்டு ஒட்டுமொத்த குடும்பமும் ஆடிப் போயுள்ளது. முதல் கட்ட விசாரணையில், கணவன் உருவக்கேலி செய்ததால் இளம்பெண் விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது. குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது ராகுல் சிங், விளையாட்டாக தனது மனைவியை குரங்கு என கிண்டல் செய்துள்ளார்.
ஆனால், மாடலிங் துறையில் சாதிக்கும் வேட்டையில் உள்ள தன்னை குரங்கு என்று கூறுவதா என தன்னு சிங் ஆதங்கம் கொண்டுள்ளார். குடும்பத்தினர் முன்னிலையில் தன்னை உருவக்கேலி செய்யும் வகையில் குரங்குடன் ஒப்பிட்டு பேசியதால் கடும் மனை உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஒற்றை சொல்லால் தனது கனவை கலைக்கும் வகையில் கணவன் பேசியதால், விரக்தியின் உச்சத்துக்கே சென்றுள்ளார். 
இதனால், விபரீத முடிவு எடுத்தவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் வீட்டார் புகார் ஏதும் அளிக்கவில்லை. இருந்தபோதும், தற்கொலைக்கான தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மாடலிங் துறையில் சாதிக்கும் முனைப்பில் இருந்த இளம்பெண்ணை, குரங்கு என்று கணவன் உருவக்கேலி பேசிய ஆத்திரத்தில் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.