டெல்லியில் முகத்தை கர்சீப்பால் மூடி சென்றது யார்? இபிஎஸ்-ஐ விமர்சித்த கீதா ஜீவன்
கனிமொழி ஒன்றும் உங்களைப் போல, கர்சீப்பால் முகத்தை மூடி மறைத்து போகவில்லையே என எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி கொடுத்தார்.
2026 சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், அதற்காக தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி, பரப்புரை உள்ளிட்ட வேலைக்காக பம்பரமாய் சுழன்று வருகின்றன. அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, திமுகவினர் என்னைப் பார்த்து டெல்லிக்கு அடிமை என்றார்கள். நாங்கள் அடிமை இல்லை திமுக தான் அடிமை. டெல்லிக்கு சென்று அங்கு காங்கிரஸிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள்” என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு, பயனாளர்கள் 35 பேருக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்ற கனிமொழி எம்பி, கூட்டணிக் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். அதில் என்ன தவறு என தெரியவில்லை. இவரை (எடப்பாடி பழனிசாமி) போன்று கர்சீப்பை எடுத்து முகத்தை மூடிக் கொண்டு போகவில்லையே” என்றார். மேலும், திமுக கூட்டணி கலையும் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு, “அவருடைய ஆசை கூறுகிறார். ஆனால், அது நடக்காது” எனப் பதிலளித்தார்.
முன்னதாக, டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து வெளியே வந்த போது கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொண்டு செல்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா வீட்டிலிருந்து வெளியே வந்த போது, கர்சீப்பை எடுத்து முகத்தை தான் துடைத்தேன். முகத்தை துடைத்ததில் என்ன அரசியல் உள்ளது? அதனை வீடியோவாக எடுத்து பரப்புவதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.