அமித் ஷாவின் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது... ஆ.ராசா பரபரப்பு பேச்சு

அமித் ஷாவின் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது... ஆ.ராசா பரபரப்பு பேச்சு

எங்களுக்கும் சாமி நம்பிக்கை வந்துவிட்டது. கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் ஆகிய இரு எல்லைச்சாமிகள் உள்ள வரை மோடி, அமித்ஷா போன்ற ஒருவராலும் தமிழ்நாட்டிற்குள் வர முடியாது என எம்.பி ஆ.ராசா பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் தீயாய் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களும் நடந்து வருகிறது.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ‘திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கும் விழா மற்றும் இதுதான் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தி.க தலைவர் கீ.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தொடர்ந்து மேடையில் பேசிய எம்.பி ஆ.ராசா, “பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்றைக்கும் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. அகிலேஷ் யாதவ்வாக இருந்தாலும், மம்தாவாக இருந்தாலும், வேறு கூட்டணிக்கட்சிகள் யாராக இருந்தாலும் எங்களிடம், ‘பாஜக இவ்வளவு தந்திரம் செய்து, பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, மதவெறிகளை தூண்டி, ED - IT - சிபிஐ என அத்தனையையும் வைத்து மிரட்டுகிறார்கள். எல்லா மாநிலத்திலும் நுழையும் பாஜகவால் தமிழ்நாட்டிற்குள் வர முடியவில்லையே எப்படி?’ என்று கேட்கிறார்கள்.

அதற்கு காரணம், தமிழ்நாட்டில் எல்லைச்சாமிகள் இங்கிருக்கிறார்கள். எங்களுக்கும் சாமி நம்பிக்கை வந்துவிட்டது. 92 வயதில் கி.வீரமணி என்ற ஒரு எல்லைச்சாமி இருக்கிறார். அதேபோல, 72 வயதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ற ஒரு எல்லைச்சாமி கோட்டையில் இருக்கிறார். இந்த இரண்டு எல்லைச்சாமிகள் தமிழ்நாட்டில் இருக்கும் வரை பெரியார், அண்ணா, கலைஞர் எல்லோரும் உயிருடன் இருப்பது போன்றுதான் அர்த்தம். அதுவரை மோடி, அமித் ஷா போன்ற ஒருவராலும் உள்ளே வர முடியாது. அதுதான் சூத்திரம்.

எனவே, நமக்கு தேவையாக தத்துவத்திற்கு ஒரு தலைவரும், அந்த தத்துவத்தை வைத்து ஆட்சி செய்யும் ஒரு தலைவரும் இருக்கும் வரை, இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மோடியையும், அமித்ஷாவையும் இம்மண்ணில் இருந்து ஓட்டக்கூடிய வலிமையை அவர்கள் தருவார்கள். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நாங்கள் Out of control of delhi-னு சொல்லும் துணிச்சல் வேறுயாருக்காவது இருக்கா?” என பேசினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட திமுக, திக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். இறுதியாக, எம்.எல்.ஏ பிரபாகரன் ரூ.1.30 லட்சம் நிதியை தி.க ஆசிரியர் வீரமணியிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.