ரூபாயை தொட்டா கை கழுவ மறந்துடாதீங்க - இல்லைன்னா இத்தனை பிரச்சனைகள் காத்திருக்கு!
பணம் பத்தும் செய்யும் என்பதற்கு ஏற்ப, நோய்க்கிருமிகளையும் நம் படுக்கை அறை வரை கொண்டு வரும் என்பது தான் இன்றைய கசப்பான உண்மை. காலையில் பால் பாக்கெட் வாங்குவதில் தொடங்கி, பேருந்து பயணம், காய்கறி சந்தை என நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் நீக்கமற நிறைந்திருக்கிறது.
நாம் ஆசையாகவும் பாதுகாப்பாகவும் பையில் வைக்கும் அந்த பணம், உண்மையில் எத்தனை பேரின் கைகளை கடந்து வந்திருக்கும் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? ஒரு நோட்டு அழுக்காக இருக்கிறது என்று நாம் நினைக்கும்போது, அதில் வெறும் தூசி மட்டும் இல்லை, நம் கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான கிருமிகளின் கூடாரமே அங்கு ஒளிந்திருக்கிறது.
குறிப்பாக, கைகளை சுத்தப்படுத்தாமல் பணத்தை கையாண்ட பிறகு உணவருந்துவது அல்லது முகத்தை தொடுவது போன்ற பழக்கங்கள் நம்மை அறியாமலேயே பேராபத்தை விளைவிக்கும். இந்த சூழலில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள், சில்லறை காசுகளும் எவ்வளவு ஆபத்தானவை என்பதை பற்றியும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்தும் விரிவாக பார்ப்போம்.
ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மூலம் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியா தொற்றுகள் பரவுவதாக Money and Microbes: A Global Systematic Review and Meta-Analysis of Currency Contamination என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணற்ற கைகள் மற்றும் சுகாதாரமற்ற சூழல்களை கடந்து வரும் இந்த பணம், மருந்துகளுக்குக் கட்டுப்படாத (Drug-resistant) கொடிய கிருமிகளை சுமந்து திரிகிறது.
முறையான சுகாதாரத்தை பேணாமல் பணத்தை கையாளுவது, குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பணம் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தாலும், அது ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கிறது.
ரூபாய் நோட்டுகள் பெரும்பாலும் பருத்தி இழைகளால் (Cotton-based fibers) தயாரிக்கப்படுகிறது. இந்த இழை அமைப்பானது ஈரப்பதம், வியர்வை, உணவுத் துகள்கள் மற்றும் அழுக்குகளை எளிதில் ஈர்த்து கொள்கிறது. இதனால் நுண்கிருமிகள் நீண்ட காலம் உயிர்வாழ இது ஒரு சொகுசான இடமாக மாறிவிடுகிறது.
உலோகத்தால் ஆன நாணயங்கள் ஓரளவு கிருமிநாசினி தன்மையை கொண்டிருந்தாலும், அவற்றில் பல வகையான நோய்க்கிருமிகள் பல மணிநேரம் அல்லது சில நாட்கள் வரை உயிர்வாழ முடியும் என்பது தெரியவந்துள்ளது. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, பணத்தில் உள்ள கிருமிகளில் பல சாதாரணமானவையாக இருந்தாலும், கணிசமான அளவு கிருமிகள் தீவிர நோய்களை உண்டாக்கக்கூடியவை.
குறிப்பாக, 13 சதவீத நாணயங்களிலும், 42 சதவீத காகிதப் பணத்திலும் 'ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ்' (Staphylococcus aureus), 'ஈ-கோலை' (E. coli), மற்றும் 'சூடோமோனாஸ்' (Pseudomonas aeruginosa) போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவை பொதுவாக நிமோனியா, தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. சில அமெரிக்க ஆய்வுகளில், ரூபாய் நோட்டுகளில் போதைப் பொருட்களின் துகள்களும், பூஞ்சைக்காளான்களும் (Fungi) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு சதுர சென்டிமீட்டர் பணத்தில் குறைந்தது பத்து நுண்கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
பணம் மிக வேகமாக கைமாறுவதுதான் இதன் ஆபத்தை இன்னும் அதிகமாக்குகிறது. ஒரு நாளில் ஒரு ரூபாய் நோட்டு பல டஜன் நபர்களை சென்றடைகிறது. இருமும்போது கையை வைத்து மறைப்பவர்கள், உணவை கையாளுபவர்கள், மருத்துவமனைக்குச் செல்பவர்கள் அல்லது பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்துபவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களிடம் இந்த பணம் புழங்குகிறது.
ஒவ்வொரு முறை கைமாறும் போதும், ஒரு புதிய கிருமிப் படலம் அந்தப் பணத்தில் சேர்ந்து கொண்டே போகிறது. முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீண்ட கால உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு இத்தகைய கிருமிகளின் நேரடித் தொடர்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என Dirty Money: A Matter of Bacterial Survival, Adherence, and Toxicity என்ற தலைப்பில் வெளியான NIH ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்காக பணத்தையே பயன்படுத்த கூடாது என்பது பொருளல்ல, மாறாக கவனமுடன் இருக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுரை. பணத்தைக் கையாண்ட பிறகு, குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பு சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவுவது மிக அவசியம். தண்ணீர் கிடைக்காத இடங்களில் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களைப் பயன்படுத்தலாம். உணவகங்களில் வேலை செய்பவர்கள் பணத்தையும் உணவையும் ஒரே நேரத்தில் கையாளுவதைத் தவிர்க்க வேண்டும்.
தற்போது பெருகிவரும் டிஜிட்டல் மற்றும் காண்டாக்ட்லெஸ் (Contactless) பணப்பரிமாற்ற முறைகள், இந்தப் பணவழிப் பரவல் ஆபத்தைக் குறைக்க ஒரு சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன. இருப்பினும், அன்றாட வாழ்வில் ரொக்கப் பணத்தின் தேவை இன்னும் முழுமையாக மறையவில்லை.
எனவே, பணத்தில் மறைந்திருக்கும் இத்தகைய கிருமிகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதும், தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதும் நம்மை மட்டுமன்றி நம் சமூகத்தையும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.