காயத்தில் இருந்து மீண்டும் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது - ஸ்ரேயாஸ் ஐயர்
ஆஸ்திரேலிய தொடரின் போது காயத்தை சந்தித்த இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தனது உடல் நிலை குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயத்தை சந்தித்த துணைக்கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தனது உடல் நிலை குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "சூரிய ஒளி ஒரு சிறந்த சிகிச்சையாக இருந்தது. காயத்தில் இருந்து மீண்டும் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்மீது அன்பு மற்றும் அக்கறை காட்டியவர்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயரின் இன்ஸ்டா பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.