தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 70 வயதிலும் சுறுசுறுப்பாக படங்கள் நடித்து வருகிறார். எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதை மிகவும் விரும்புவார்.
சினிமா படப்பிடிப்புகள் இல்லாத வேளையில் தனது பேரன்களுடன் நேரத்தை செலவிடுகிறார். ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஐஸ்வர்யா இயக்குநராக '3', 'வை ராஜா வை', 'லால் சலாம்', போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் சௌந்தர்யா இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் படமான 'கோச்சடையான்' படத்தை இயக்கினார். தயாரிப்பாளராக கோவா படத்தை தயாரித்தவர். இப்போது அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ஆகியோர் நடித்துள்ள 'வித் லவ்' திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இதன் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய செளந்தர்யா, "எனது மகன் வேத் 100 சதவீதம் சினிமாவில் நடிப்பான். எனது பெயருக்கு பின்னால் உள்ள ரஜினிகாந்த் என்கிற மரபை என் மகன் வேத் முன்னெடுத்துச் செல்வான். வேத் நிச்சயமாக சினிமாவில் நடிப்பார்" என்றார்.
ரஜினிகாந்திற்கு நான்கு பேரக்குழந்தைகள் உள்ளனர். இதில், ஐஸ்வர்யாவின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா. அதேபோல் சௌந்தர்யாவின் மகன்கள் வேத் மற்றும் வீர். இதில் மூத்த மகன் தான் வேத்.
ரஜினிகாந்தின் பேரன் வேத், சௌந்தர்யாவிற்கும் அவரது முதல் கணவர் அஷ்வினுக்கும் 2015-ல் பிறந்தவர். ரஜினிகாந்த் தனது பேரன் வேத்துடன் விளையாடும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வைரலாகியுள்ளன. குறிப்பாக, 'பேட்ட' பட பாணியில் வேத் போஸ் கொடுத்த புகைப்படம் மிகவும் பிரபலம். வேத் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்.