ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று தைத்தேரோட்டம்... பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று தைத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் “ரங்கா.. ரங்கா.. கோவிந்தா.. கோவிந்தா..” என்ற கோஷங்கள் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்றும், 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும் விளங்கும் திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா ஜன.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினந்தோறும் யாளி வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களில் உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
தை தேர் உற்சவத்தின் 9-ம் திருநாளான இன்று தைத்தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4 மணிக்கு நம் பெருமாள் முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தைத் தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் தனுர் லக்னத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சரியாக காலை 6 மணிக்கு பக்தர்கள் "ரங்கா.. ரங்கா.. கோவிந்தா.. கோவிந்தா.." கோஷங்கள் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு உத்தர வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்தபடி வலம் வந்த தைத்தீர் சரியாக காலை 9 மணிக்கு நிலையை வந்து அடைந்தது.இந்தத் தை தேரில் மட்டும்தான் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் கைத்தேர் திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.