F4 இந்தியன் சாம்பியன்ஷிப்: பட்டம் வென்று சாதனை படைத்த கென்ய வீரர்
இருங்காட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற 'ஃபார்முலா 4' இந்தியன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை டர்போ ரைடர்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
'ஃபார்முலா 4' என்றழைக்கப்படும் கார் பந்தயத்தின் இந்தியன் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான போட்டிகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 5 சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டிகள் சென்னை, கோவை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ளன.
இதில் நான்கு சுற்று போட்டிகள் ஏற்கெனவே முடிவடைந்திருந்த நிலையில், இறுதிச் சுற்று போட்டியானது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள இருங்காட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 14க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த இறுதிச்சுற்றில் கடுமையான சவால்களை தாண்டி, பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சசெல் ரோட்ஜ் வீரர் (கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூரு அணியை சார்ந்தவர்) முதல் இடத்தைப் பிடித்து அசத்தினார். அதே சமயம், சென்னை டர்போ ரைடர்ஸ் அணி சார்பில் பங்கேற்ற கென்யாவை சேர்ந்த 15 வயது இளம் வீரர் ஷேன் சந்தாரியா இரண்டாம் இடத்தை பிடித்தார்.
மேற்கொண்டு ஐந்து சுற்றுகளின் முடிவில் சிறப்பாக செயல்பட்ட கென்ய வீரர் ஷேன் சந்தாரியா, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 2025ஆம் ஆண்டு சீசனில், சந்தாரியா 3 வெற்றிகள், 8 போடியங்கள், 4 போல் பொசிஷன்கள் மற்றும் 5 அதிவேக சுற்றுகள் உட்பட மொத்தம் 187 புள்ளிகளை பெற்றதன் மூலம் அவருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.