முகப்பரு, உடல் எடை அதிகரிப்பா? PCOS அறிகுறியாக கூட இருக்கலாம்!

முகப்பரு, உடல் எடை அதிகரிப்பா? PCOS அறிகுறியாக கூட இருக்கலாம்!

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண் PCOS எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பால் அவதிப்படுவதாகவும், மொத்தம் 20 சதவீத பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளி விவரங்கள். பல நேரங்களில், உடல் எடை கூடுவதையோ அல்லது முகம் பொலிவிழப்பதையோ வெறும் அழகியல் சார்ந்த பிரச்சனையாகவோ அல்லது அதிக வேலைப்பளுவின் விளைவாகவோ நாம் தவறாக புரிந்து கொள்கிறோம்.

உண்மையில், காரணமே இல்லாமல் வரும் கோபம், தீராத சோர்வு மற்றும் சீரற்ற மாதவிடாய் ஆகியவை ஒரு பெண்ணின் மனநலனையும் உடல் நலனையும் மெல்ல மெல்ல சிதைக்கக்கூடிய ஹார்மோன் மாற்றங்களின் வெளிப்பாடாகும்.

"இது எல்லோருக்கும் வருவதுதான்", "வயதானால் சரியாகிவிடும்" என்ற அலட்சியமான பேச்சுகளால், பல பெண்கள் முறையான சிகிச்சையை ஆரம்பத்திலேயே பெறத் தவறவிடுகின்றனர். இது வெறும் உடல்நலப் பிரச்சனை மட்டுமல்ல, ஒரு பெண்ணின் அன்றாட வாழ்வியலை மாற்றியமைக்கும் ஒரு சவால் என வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள். இதைச் சரியாகப் புரிந்துகொண்டு, அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம்.

பெண்கள் சாதாரணமாக நினைக்கும் PCOS-ன் முக்கிய அறிகுறிகள்:

திடீர் உடல் எடை அதிகரிப்பு: PCOS பாதிப்பு உள்ளவர்களின் உடலில் 'இன்சுலின்' ஹார்மோன் சரியாக வேலை செய்யாது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்காது. இதன் விளைவாக, குறிப்பாக வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேரும்.

பல பெண்கள் தாங்கள் அதிகமாகச் சாப்பிடுவதால்தான் எடை கூடுகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் செய்யாவிட்டாலும் உடல் எடை கூடுவதும், கடுமையான டயட் இருந்தாலும் எடை குறையாமல் இருப்பதும் PCOS-ன் முக்கிய அறிகுறியாகும்.

அடிக்கடி மாறும் மனநிலை மற்றும் எரிச்சல்: PCOS காரணமாக ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஒரு பெண்ணின் மனநிலையை அடிக்கடி மாற்றும். காரணமே இல்லாமல் திடீரென கோபம் வருவது, பதற்றம் அடைவது அல்லது மிகுந்த சோகத்திற்கு உள்ளாவது போன்றவை ஏற்படலாம். இதை வெறும் மன அழுத்தம் என்று ஒதுக்கிவிட முடியாது; இது உடலில் உள்ள ஹார்மோன்கள் விளையாடும் விளையாட்டு.

விடாப்பிடியான முகப்பரு: உடலில் ஆண் ஹார்மோன்கள் (Androgen) அதிகமாகும்போது, அது முகத்தில் அதிக எண்ணெயைச் சுரக்கச் செய்து முகப்பருக்களை உண்டாக்கும். குறிப்பாகத் தாடை, கன்னம் மற்றும் முதுகுப் பகுதிகளில் வரும் வலி நிறைந்த மற்றும் எளிதில் குணமாகாத பருக்கள் PCOS-ன் அடையாளமாக இருக்கலாம்.

தலைமுடி மெலிதாதல் அல்லது முடி கொட்டுதல்: அதிகப்படியான வேலைப்பளுவால் முடி கொட்டுவதாகப் பெண்கள் கருதுகின்றனர். ஆனால், உடலில் ஆண் ஹார்மோன்கள் அதிகரிக்கும்போது, ஆண்களுக்கு முடி கொட்டுவது போலத் தலையின் முன் பகுதியில் அல்லது உச்சந்தலையில் முடி மெலிந்து கொட்டத் தொடங்கும்.

முகம் மற்றும் உடலில் தேவையற்ற முடி வளர்ச்சி: முகத்தில் தாடைப் பகுதி, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தேவையற்ற முடி வளர்வதை 'ஹிர்சுட்டிசம்' (Hirsutism) என்று அழைப்பார்கள். இது உடலில் ஆண் ஹார்மோன் மிக அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.

அதீத சோர்வு மற்றும் குறைந்த ஆற்றல்: வேகமான வாழ்க்கை முறையில் சோர்வு என்பது இயல்பானது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், PCOS உள்ளவர்களுக்கு ஹார்மோன் கோளாறு மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் காரணமாக, போதுமான அளவு ஓய்வு எடுத்த பிறகும் உடல் எப்போதும் சோர்வாகவே இருக்கும்.