6,6,6,6,6,4: ஒரே ஓவரில் விளாசி ஆட்டத்தை மாற்றிய ஹர்திக் பாண்டியா

6,6,6,6,6,4: ஒரே ஓவரில் விளாசி ஆட்டத்தை மாற்றிய ஹர்திக் பாண்டியா

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா, விதர்பாவுக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டதுடன், மொத்தமாக 34 ரன்களைச் சேர்த்து மிரட்டியுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் குரூப் பி அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் பரோடா மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய பரோடா அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் நித்யா பாண்டியா 15 ரன்களிலும், அமித் பாசி ரன்கள் ஏதுமின்றியும், பிரியான்ஷ் மோலியா 16 ரன்களிலும், அடித் ஷெத் 21 ரன்களிலும், கேப்டன் குர்னால் பாண்டியா 23 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 150 ரன்களையாவது தாண்டுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன.

அது போன்ற சூழ்நிலையில் 7-வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவர் 44 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்திருந்தார். அப்போது ஆட்டத்தின் 39-வது ஓவரை விதர்பா அணி தரப்பில் பர்த் ரகேடா வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா தனது ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வகையில் ஓவரின் முதல் 5 பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா, கடைசி பந்தில் பவுண்டரியுடன் நிறைவு செய்தார். இதன் மூலம் அவர் தனது சதத்தையும் பூர்த்தி செய்திருந்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் தன்னுடைய முதல் சதத்தையும் பதிவு செய்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக ரகேடா வீசிய அந்த ஓவருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா 62 பந்துகளில் 66 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் அந்த ஓவரின் முடிவில் அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என 34 ரன்களைச் சேர்த்ததுடன், 68 பந்துகளில் தனது சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் அவர் 8 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் என 133 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதம் காலமே உள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா இவ்வாறு அதிரடியாக விளையாடி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் தற்சமயம் அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மிக முக்கிய ஆல் ரவுண்டராக உள்ளார். இதனால் அவரது இந்த ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் பலத்தை கொடுப்பதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.