நாயகன்: தமிழ் சினிமாவில் நெருங்க முடியாத கிளாசிக்... ஏன்?

நாயகன்: தமிழ் சினிமாவில் நெருங்க முடியாத கிளாசிக்... ஏன்?

தமிழ் சினிமாவில் ‘நாயகன்’ இணையற்ற கிளாசிக் என்றால் மிகையல்ல.

அவசரகதி அவதானிப்புகள், முன்முடிவு தீர்ப்புகள் சடுதியாடும் ஆய்வுகளற்ற டிஜிட்டல் உலகில் ‘நாயகன்’ படத்தை ‘காட்ஃபாதர்’ காப்பி என தட்டையாக அடித்து விடப்படுவதுண்டு. மேலும், மணிரத்னம் படங்கள் ப்ளாஸ்டிக் என்றும் தட்டையாக அடித்து விடப்படுவதுண்டு. இத்தகைய அவதூறுகளுக்கு பதிலாக எழுத ஆரம்பித்த இந்தக் கட்டுரை, ‘நாயகன்’ திரைப்படம் குறித்த ஒரு சிறிய மதிப்பீடாக வந்து நின்றது.

காட்ஃபாதரின் அடித்தளமும் சொந்த ஆன்மாவும்:

எளிய மக்களை அதிகார சக்திகள் நசுக்கும்போது எதிர்வினையாக அவர்கள் மத்தியிலிருந்து ஒரு சக்தி வாய்ந்தவன் உருவெடுக்கிறான் / நீதியிலிருந்தே உருவெடுக்கும் அவன், நீதிக்கு மாறான திசையிலும் செல்ல நேர்கிறான் / இதனா‌ல் குடும்பத்துக்குள் ஏற்படும் சிதறல் / பராக்கிரமங்கள் நிறைந்த ஒரு கேங்க்ஸ்ட்டர் கதையை ஒரு நிதானமான எமோஷனல் பர்னராக ஆக உருவாக்கியது. இத்தகைய அம்சங்கள் காட்ஃபாதரில் இருந்து நாயகனுக்கு ஊக்கமளித்திருக்கிறது. இரண்டு படங்களுமே கதாபாத்திர மையம் கொண்ட (Character Driven) திரைக்கதைகள்.

‘காட்ஃபாதர்’ மைக்கேல் கார்லியோனது பயணம் மாஃபியா அதிகாரத்தை நிலைநிறுத்தும் நெடுங்கதை. தனது ஒவ்வொரு எதிர்கொள்ளல்களிலும் மேலும் மேலும் மூர்க்கமான கிரிமினல் லார்டாக மாறுகிறான் மைக்கேல். ஆனால், வேலு நாயக்கர் அப்படி அல்ல. காட்ஃபாதரில் இருந்து நாயகன் மாறுபட்டு தன் சொந்த ஆன்மாவை உருவாக்கும் புள்ளி இங்குத் தொடங்குகிறது.

வேலுவின் புற வாழ்வு - அக வாழ்வு என்ற இரண்டு பரிமாணங்களுக்கு இடையே மற்றொரு பரிமாணம் இருக்கிறது. அதிகார சக்திகளை எதிர்ப்பதில் பராக்கிரமம் நிறைந்தவன், குடும்பத்தினரின் மீது பாசம் நிறைந்தவன் என்ற இரண்டு பரிமாணங்களை விடவும், எளிய மனிதர்களுக்காக பரிதவிப்பவன் என்கிற வேலுவின் பரிமாணமே நாயகனின் தனித்துவம்.

தந்தையைக் கொன்ற பொறுக்கி போலீஸை அடித்தே கொல்வார் வேலு. அடுத்தக் காட்சியில் நீலாவை பாலியல் தொழிலில் இருந்து விடுவித்து திருமண‌ம் செய்துள்வார் வேலு. நேசம் மிஞ்சும் அக வாழ்வு.

ஏழைகளின் வீட்டை அப்புறப்படுத்த முயலும் பணக்காரர் வீட்டை நொறுக்கி, அவனை பணிய வைப்பார் வேலு. சாகசம்! அடுத்த காட்சியில், தான் கொன்ற போலீஸின் குடும்பத்தை சந்தித்து, அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய வாக்குறுதி அளிப்பார். மனிதம்!