ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.10 லட்சம், சொகுசு கார் மோசடி புகார்: சீரியல் நடிகை உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஓட்டல் உரிமையாளரிடம் 10 லட்சம் ரூபாய் பணம், சொகுசு கார், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சீரியல் நடிகை அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ராணி. இவரது கணவர் பாலாஜி. இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாலாஜி தனது நண்பர்கள் கரூரை சேர்ந்த வடிவேலு, ஆறுமுகம் மூலம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடை சேர்ந்த தினேஷ்ராஜ் என்பவருடன் பழக்கமாகி உள்ளார். தினேஷ்ராஜ் கரூரில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் விடுதி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தினேஷ்ராஜிடம் தனக்கு தொழில்ரீதியாக பணத்தேவை ஏற்பட்டுள்ளதாகக் கூறி பாலாஜி ரூ.10 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் பாலாஜியின் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் ஐந்து சவரன் தங்க நகை என இரண்டையும் தன்னுடைய மனைவி ராணியிடம் (சீரியல் நடிகை) காட்டி விட்டு, திருப்பித் தருவதாக வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவருடன் சென்னையை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் வந்துள்ளார். ஆனால், பணம், கார் மற்றும் நகையை பாலாஜி திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.
பின்னர் தினேஷ் ராஜ், பாலாஜியை பல முறை அணுகிய போதும் சரியான பதில் வரவில்லை என தெரிகிறது. இறுதியாக தினேஷ் ராஜ், கரூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் பாலாஜியின் வீட்டிற்கு நேரில் சென்று கேட்ட போது, அவர் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கரூர் நகர காவல் நிலையத்தில் தினேஷ்ராஜ் புகார் அளித்தார். அந்தப் புகாரில், பாலாஜியை அழைத்து விசாரணை செய்து தன்னுடைய சொகுசு கார், ஐந்து சவரன் நகை, மற்றும் ரூபாய் 10 லட்சத்தை பெற்று தர வேண்டும். மேலும் தன்னை நம்ப வைத்து மோசடி செய்த பாலாஜி என்ற பாலமுருகன், அவரது மனைவி ராணி, புருஷோத்தமன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினேஷ் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
புகாரின் பேரில் கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை நடத்தினார். இதனையடுத்து, பாலாஜி என்ற பாலமுருகன், அவரது மனைவி சீரியல் நடிகை ராணி, பாலாஜியின் நண்பர் புருஷோத்தமன் ஆகிய மூவர் மீது BNS 296(b), 115(2), 316(5), 318(4), 351(3) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.