சினிமாவில் 20 ஆண்டுகள்… ஆனாலும் ‘ஸ்டார்’ நடிகையாக முடியவில்லை.. அஜித் பட நடிகை யார்?
சினிமாவில் 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். அஜித் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது.
சினிமாவில் சிலருக்கான அங்கீகாரம் என்பது உடனே கிடைத்துவிடும். சிலருக்கு அது எட்டாக்கனி தான். திறமை இருந்தும் சிலருக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால் தான் சினிமா துறை என்பது கணிக்க முடியாத துறையாக கருதப்படுகிறது. ஆனால், தொடர்ந்து முயற்சித்து வரும் நடிகர்கள் எப்படியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த நடிகை 20 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். ஆனால் அவருக்கான அங்கீகாரம் பெரிய அளவில் கிடைக்கவில்லை.
நடிகை ரெஜினா கசாண்ட்ரா சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை ஆங்கிலோ இந்தியன் என கூறப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி படித்த ரெஜினா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்து ‘அழகிய அசுரா’ படத்தில் நடித்தார். ‘சூர்யா காந்தி’ படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். 2012-ல் வெளியான ‘சிவா மனசுலோ ஸ்ருதி’ படத்தின் மூலம் தெலுங்கில் அடியெடுத்து வைத்தார். ‘ரொட்டின் லவ் ஸ்டோரி’ படத்தில் தெலுங்கு படத்தில் நடித்தார்.
இப்படியாக அடையாளம் பெறாமல் நடித்து வந்த ரெஜினாவுக்கு குறிப்பிட்ட அடையாளத்தை கொடுத்த படம் 2013-ல் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார் ரெஜினா. தமிழில், ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் நடித்தார். ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

‘ஸ்டார்’ அந்தஸ்து பெற்ற நடிகர்களுடன் நடிக்காத ரெஜினா தெலுங்கில் ‘ஆச்சார்யா’ படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்தார். தமிழில் அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தில் வில்லியாக அசத்தியிருந்தார். ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்து வருகிறார். 20 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் ரெஜினாவுக்கு ‘ஸ்டார்’ நடிகைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இருப்பினும் தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார். வெற்றிகள் கிடைக்காமல் வந்த வேகத்திலேயே சினிமாவிலிருந்து பல நடிகைகள் விலகிய நிலையில், தொடர்ந்து தனக்கான வெற்றியையும், அங்கீகாரத்தையும் பெற சினிமாவில் நடித்து வருகிறார் ரெஜினா. அவருக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.