தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 1,804 யானைகள் உயிரிழப்பு - வனத்துறை அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 ஆண்டுகளில் மொத்தம் 1,804 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றான யானை, புத்திசாலித்தனமான மற்றும் மனிதர்களுடன் பழகக்கூடிய சமூக விலங்காகவும் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த யானைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. 2025ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 3,170 காட்டு யானைகள் இருப்பது தெரியவந்தது. அந்த வகையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 1,777 யானைகளும், கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,345 யானைகளும் உள்ளன.
யானைகளின் எண்ணிக்கை விவரம்
குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் வனப்பகுதிகளில் தான் அதிகளவிலான காட்டு யானைகள் வாழ்கின்றன என்பது தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை வனக்கோட்டத்தில் 325 காட்டு யானைகளும், மசினகுடி வனக்கோட்டத்தில் 185 காட்டு யானைகளும், நீலகிரி வனக்கோட்டத்தில் 36 காட்டு யானைகளும், கூடலூர் வனக்கோட்டத்தில் 137 காட்டு யானைகளும் உள்ளன.
அதேபோல, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் 224 காட்டு யானைகளும், திருப்பூர் வனக்கோட்டத்தில் 200 காட்டு யானைகளும் வாழ்ந்து வருகின்றன. கோவை வனக்கோட்டத்தில் உள்ள மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெ.நா.பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்களில் மொத்தம் 228 காட்டு யானைகள் உள்ளன. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் 329 காட்டு யானைகளும், ஹசனூர் வனக்கோட்டத்தில் 360 காட்டு யானைகளும், ஈரோடு வனக்கோட்டத்தில் 115 காட்டு யானைகளும் வசிக்கின்றன. இதற்கிடையே, மற்ற மாநிலங்களிலிருந்தும் காட்டு யானைகள் இப்பகுதிகளுக்கு அடிக்கடி வலசை வந்து செல்கின்றன.
ருசியான உணவை தேடி ஊருக்குள் வரும் காட்டு யானை
இந்நிலையில், பல்வேறு காரணங்களால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. சில சமயங்களில் காட்டில் நிலவும் யானைகளுக்கு தேவையான உணவு பற்றாக்குறை இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் கரும்பு, வாழை, விவசாயப் பயிர்கள், ரேஷன் அரிசி, கால்நடை தீவனங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டுப் பழகியதால் ஏற்பட்ட உணவுப்பழக்க மாற்றங்களும் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. அப்படி ஊருக்குள் நுழையும் யானைகளால் பயிர் சேதங்கள் மட்டுமின்றி, சில நேரத்தில் மனித-மிருக மோதல்களும் ஏற்படுகின்றன.

1,804 காட்டு யானைகள் உயிரிழப்பு
இதுபோன்ற சூழலில் தான் 2010 - 2025 வரை, கடந்த 15 ஆண்டுகளில் காட்டு யானைகள் உயிரிழப்பு தொடர்பான விபரங்களை வனத்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி குறிப்பிட்ட காலகட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் 1,804 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அதில், இயற்கை காரணங்களால் 1,613 காட்டு யானைகளும், இயற்கைக்கு மாறான காரணங்களால் 191 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

யானைகள் இறப்புக்கான காரணம்
84 காட்டு யானைகள் நோய்கள் காரணமாகவும், 43 யானைகள் வயது முதிர்வு காரணமாகவும், 86 யானைகள் வழுக்கி விழுந்தும், இரு யானைகளுக்கு இடையேயான சண்டையில் 107 யானைகளும், பட்டினியால் 26 யானைகளும், வேட்டை விலங்குகள் தாக்குதல் காரணமாக 32 யானைகளும், 27 யானைகள் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளன. இதர இயற்கையான காரணங்களால் 152 யானைகள் உயிரிழந்துள்ளன. மேலும், 180 யானைகள் உடற்கூராய்வு செய்ய உகந்த நிலையில் இல்லாததால், அவற்றின் இறப்பிற்கான காரணம் கண்டறியவில்லை.

இதேபோல, 84 யானைகள் மின்சாரம் தாக்கியும், 14 யானைகள் வேட்டை காரணமாகவும், 2 யானைகள் விஷம் வைத்ததாலும், 13 யானைகள் துப்பாக்கி சூட்டிலும், 8 யானைகள் ரயில் விபத்திலும், 4 யானைகள் சாலை விபத்திலும், 9 யானைகள் இதர காரணங்களாலும் என இயற்கைக்கு மாறான காரணங்களால் உயிரிழந்துள்ளன.
யானைகள் வேட்டை குறைவு
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "காட்டு யானைகள் பெரும்பாலும் உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாகவே உயிரிழந்துள்ளன. இயற்கைக்கு மாறான காரணங்களால் உயிரிழப்பு என்பது குறைந்த அளவிலேயே உள்ளது. ஒரு யானை உயிரிழந்துவிட்டால் அதற்கான காரணத்தைக் கண்டறிய, வனக் கால்நடை மருத்துவர்களால் உடற்கூராய்வு செய்யப்படும். ஒருவேலை இயற்கைக்கு மாறான காரணங்களால் காட்டு யானைகள் உயிரிழக்க நேரிட்டால், அதற்கு காரணமான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர் நடவடிக்கை, விழிப்புணர்வால் யானை வேட்டையும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது," என்றனர்.

ஏஐ உதவியால் யானை உயிரிழப்பு தவிர்ப்பு
"குறிப்பாக, வனத்தை ஒட்டிய பகுதிகளில் அடிக்கடி நாட்டு வெடிகுண்டு, மின்வேலி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராம மக்களிடையே யானைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படியே கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை வனப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து விரட்டும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களுக்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மதுக்கரையில் AI தொழில்நுட்ப உதவியால் செயல்படுத்தப்படும் கட்டுப்பாட்டு மையத்தால், கடந்த 2 ஆண்டுகளில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது” என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.