தவெகவை நோக்கி வரும் விசிக தொண்டர்கள் - செங்கோட்டையன் தகவல்

தவெகவை நோக்கி வரும் விசிக தொண்டர்கள் - செங்கோட்டையன் தகவல்

விசிக வருகிறதோ இல்லையோ, விசிக தொண்டர்கள் தவெகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் தமிழக வெற்றிக் கழக கிளை அலுவலகத்தை திறந்து வைத்த தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”புத்தாண்டு ஒன்றாம் தேதி அன்று புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பும் தலைவராக விஜய் உள்ளார். அவர்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்.

மலேசியாவில் நடைபெற்ற 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. 2026இல் வெற்றி இலக்கை அடைவார். மக்களுக்கான ஆட்சி, தூய்மையான ஆட்சி, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஆட்சி அமையும்” என்றார்.

டிடிவி, ஒபிஎஸ் தவெக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, ”எல்லோருடைய எண்ணங்களும் ஒன்று தான். எல்லோரும் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டில் நல்லாட்சி வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அது மிக விரைவிலே வெற்றிகரமாக நடைபெறும்.

திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு வருவது திருமாவளவன் செயல்பாடு காட்டுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதற்கு காலம் பதில் சொல்லும். விசிக வருகிறதோ இல்லையோ, விசிக தொண்டர்கள் அனைவரும் தவெகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்" என்றார்.

திருப்பூரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற மகளிர் மாநாடு குறித்த கேள்விக்கு, ”ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கூட்டி வருவது என்றால் நீங்களும் அதை செய்யலாம்” என தெரிவித்தார்.