சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்; சுவிஸ் மதுபான விடுதி தீ விபத்தில் 40 பேர் வரை உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் மொன்டானா நகரின் பிரபல மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் காவல் துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது நிச்சயமாக பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
2026 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் நேற்றிரவு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. சுவிட்சர்லாந்து நாட்டின் பிரபல நகரங்களில் ஒன்றான கிரான்ஸ் -மொன்டானாவில் உள்ள பிரபல நட்சத்திர மதுபான விடுதியிலும் சுற்றுலா பயணிகள் ஆடல், பாடல் என புத்தாண்டு கொண்டாட்டங்களில் உற்சாகத்துடன் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவை தாண்டிய கொண்டாட்டங்களால் விடுதி களைகட்டியிருந்தது.
அதிகாலை 1.30 மணியளவில் விடுதியில் திடீரென பயங்கர தீ முட்டம் ஏற்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகளின் வருகையால் நிரம்பி வழிந்த விடுதிக்குள் 300 பேரும், அதன் மேல்தளத்தில் 40 பேரும் கேளிக்கைகளில் மூழ்கியிருந்தனர் என்று கிரான்ஸ் மொன்டானா நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள இணையதள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்து காவல் துறை, தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, அவசர ஊர்திகளின் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் அரசு நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் டஜன் கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளதாக கூறிய காவல் துறை அதிகாரி ஒருவர், காயமடைந்த 100 -க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள வாலிஸ் நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை அடுத்து நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்த அவர், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்,
மதுபான விடுதியில் ஆரஞ்ச் நிறத்தில் தீ பிழம்பு கொழுந்துவிட்டு எரிந்ததை தமது செல்ஃபோனில் படம்பிடித்த நியூயார்க்கை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், பாருக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்திருந்தவர்கள் திடீரென இருட்டில் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்திய நேரப்படி. சுவிட்சர்லாந்தில் இன்று அதிகாலை 4:30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.