தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மையத்தில் TET தேர்வு... நெல்லையில் சுவாரஸ்ய நிகழ்வு
நெல்லையில், ஆசிரியர் தகுதி தேர்வை தந்தையும், புதிய ஆசிரியர் பணிக்கான தேர்வை மகனும் இன்று ஒரே மையத்தில் எழுதியது சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். 50 வயதான இவர், மத்திய அரசின் கல்விக்கொள்கை மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தகுதித் தேர்வு (TET) எழுத வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக இந்த தகுதி தேர்வை எழுத விண்ணப்பித்தார்.
அதே போல அவரது மகன் தானிஷ் (22) புதிய ஆசிரியப் பணியிடத்தை நாடி இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தார். இருவருக்கும் ஒரே தேர்வு மையம் ஒதுக்கக்கட்டது. எனவே தந்தை மகன் இருவரும் உற்சாகமுடன் இன்று இந்த தேர்வை ஒரே மையத்தில் எழுதினார்கள்.
இதுகுறித்து உமர் பாரூக் கூறுகையில், "எனக்கு 50 வயதாகிறது. மத்திய அரசின் கல்வி கொள்கை மூலம் 2011 ஆம் ஆண்டுக்கு பின் ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவால் இன்று நான் தேர்வு எழுதுகிறேன். எனது மகனும் இன்று தகுதித் தேர்வை எழுதுகிறார். நானும், எனது மகனும் ஒரே நேரத்தில் ஆசிரியத் தகுதித் தேர்வை எழுதுவது ஒருபுறம் நெருடலாக இருந்தாலும், மறுபுறம் உற்சாகமாக உள்ளது.
எனது வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் எனது மகனுக்கு புதிய ஆசிரியர் பணி கிடைக்கவும் இருவரும் ஒரே மையத்தில் தேர்வு எழுதுகிறோம். ''தந்தை மகற்காற்றும் உதவி, அவையத்து முந்தி இருப்பச் செயல்'' என்ற திருக்குறள் வரிகள் நினைவுக்கு வருகிறது. எனது மகன் 10ஆம் வகுப்பு படித்த போது நான் அவனுக்கு வகுப்பாசிரியராக இருந்தேன். இன்று அதே மகனுடன் சக ஆசிரியராக தேர்வெழுதும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக'' அவர் கூறினார்.