டிஆர்பி 2-ஆம் தாள் தேர்வு; 3 லட்சம் பேர் தேர்வெழுத அனுமதி

டிஆர்பி 2-ஆம் தாள் தேர்வு; 3 லட்சம் பேர் தேர்வெழுத அனுமதி

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வின் இரண்டாம் தாள் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரிவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வில் தகுதி பெறுவதன் மூலம், மாநில பாடத்திட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் பிற துறை பள்ளிகளில், மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி பெறுவார்கள்.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு செப்டம்பர் பத்தாம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வு 2025-க்கான தாள் 1 367 மையங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 92 ஆயிரத்து 412 பேர் தேர்வு எழுதினர். மூதமுள்ள 14 ஆயிரத்து 958 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் II இன்று (நவ.16) நடைபெறுகிறது. 1,241 மையங்களில் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வினை, 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 தேர்வர்கள் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 5 ஆயிரத்து 736 மாற்றுத்திறனாளிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு ஓஎம்ஆர் முறையில் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது.

இந்த நிலையில், சென்னை கேகே நகரில் உள்ள நிர்மலா அரசு உதவி பெறும் பள்ளியில், தேர்வு எழுத வந்தவர்களை முழுவதும் சோதனை செய்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தேர்வு முழுவதும் வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டது. தேர்வறைக்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை. இதில், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நிர்மலா அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி அமுலு கூறுகையில், ”தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு வந்த பின்னர் அவர்களை பரிசோதனை செய்து தேர்வு அறைக்குள் அனுமதித்தோம். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை நடைபெறும். ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெறுகிறது” என தெரிவித்தார்.

முன்னதாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு பெறுவதற்கும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்தது. தகுதித் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தகுதித் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.