2026இல் கூட்டணி ஆட்சியா...? செல்வப்பெருந்தகை பதில்!

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையுமா? என்பதை காங்கிரஸ் தலைமையே முடிவு செய்யும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''ஆர்டிஐ (RTI) சட்டம் இயற்றி 20 ஆண்டுகள் இன்றோடு நிறைவடைகிறது. இந்த நாளை கொண்டாடும் விதமாக இன்று (அக்.12) இந்த சட்டத்தின் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. சோனியா காந்தி வழிகாட்டுதலின் பேரில் மன்மோகன் சிங் இதை கொண்டு வந்தார். இந்த சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையை பாஜக 10 ஆண்டுகளாக செய்து வருகிறது. யார் தகவல் கேட்டாலும் சரியாக கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது.
பிரதமர் வெளிநாடு சென்றால் எவ்வளவு செலவு ஆனது? என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு வலுவான சட்டம் இது. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அதுதான் தகவல் அறியும் உரிமை சட்டம். இன்று இச்சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வேலையை பாஜக செய்து வருகிறது. இதன் மூலம் எல்லா தகவல்களையும் வீட்டில் இருந்தே ஒரு கடிதம் மூலம் பெற முடியும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் RTI யில் ஆணையர்கள், துணை ஆணையர்கள் இல்லை. இதனால்தான் நான்கரை லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராணுவம், உள்துறை உள்ளிட்ட துறைகளின் தகவல்களை தவிர மற்ற தகவல்களை பெற முடியும். ஆனால் தற்போது பெற முடிவதில்லை. தேர்தல் பத்திர முறைகேடுகளை எல்லாம் கேட்டு பெற முடிவதில்லை. ஆணையர்கள் இருந்து இருந்தால் பெற முடிந்து இருக்கும். இதுதான் நிர்த்துபோகச் செய்யும் வேலை'' என்றார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள்? என்ற கேள்விக்கு, ''இதை பொது வெளியில் பேச முடியாது. அகில இந்திய தலைமையிடம் என்ன வலியுறுத்த வேண்டுமோ? அதை வலியுறுத்துவோம். கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கட்சிக்குள் சிலர் அவரவர் விருப்பத்தை சொல்கிறார்கள். அது குறித்த காங்கிரஸ் தலைமையின் வழிகாட்டுதலை தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்கும்.
இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். 5 வெற்றி தேர்தல்களை சந்தித்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. மக்கள் பிரச்சினைக்கு நாங்கள் தான் முதலில் வாய் திறக்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம், ஆணவப் படுகொலைக்கு சட்ட இயற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். மக்கள் பிரச்சனையில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது'' என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை பேச்சு குறித்து கருத்து தெரிவித்த செல்வப்பெருந்தகை, ''இபிஎஸ் பேப்பர் படிப்பதில்லை. அரசியலும் தெரிவதில்லை. வாய்க்கு வந்தது போல பேசுகிறார். இபிஎஸ் போல எங்களுக்கு கொச்சையாக பேச தெரியாது. இபிஎஸ் சட்டப்பேரவையிலேயே இருப்பதில்லை. காலையில் வருவார் எழுந்து பேச வேண்டும் என்பார். வெளிநடப்பு செய்துவிடுவார். உதய் மின் திட்டம், நீட், ஜிஎஸ்டியை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ஆனால் அதில் இபிஎஸ் கையெழுத்து போட்டார். தமிழ்நாட்டு உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டு, அடிமைதனம் செய்பவர் எங்களைப் பற்றி பேச தகுதி இருக்கிறதா?'' என கேள்வி எழுப்பினார்.
மேலும், '' இன்றைக்கு அதிமுகவின் நிலைமை என்ன? என்று அனைவருக்கும் தெரியும். ஒரு வேன் கிடைத்துவிட்டது என அதன் மீது ஏறி எல்லா இடங்களிலும் இபிஎஸ் ஒப்பாரி வைக்கிறார். ஒருமையாக, தரக்குறைவாக, கொச்சைப்படுத்தி பேசுகிறார். இபிஎஸ் மூன்றாம் தர அரசியல் செய்கிறார்'' என்றார்.