முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜே.சி.டி. பிரபாகர் இன்று தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. அதில் மிக முக்கியமானது, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து, கட்சித் தலைமைக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புது பதவிகளை உருவாக்கி, அதில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டது.
பின்னர் இருவருக்குள்ளும் சுமுக போக்கு ஏற்படாததன் காரணமாக 2022ல் மீண்டும் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டு, அதன்படி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டுவருகிறார். அந்த அணியில், ஆர். வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் இருந்தனர். பின்னர் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார்.
இதில், சமீபத்தில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதேபோல், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இந்நிலையில், இன்று ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்துவந்த அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் இன்று தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.