போராட்டத்தை பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதியில்லை: செல்வப்பெருந்தகை
தூய்மை பணியாளர்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லுவதற்கு பாஜக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்ச்சித்துள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 141ஆவது நிறுவன நாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (டிச 28) கொண்டாடப்பட்டது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, சேவா தளம் மாநில தலைவர் குங்ஃபூ விஜயன் தலைமையில் கொடுக்கப்பட்ட சேவாதார அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களின் திருவுருவ படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை தலைவர் சுதர்சனம் நாச்சியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "விடுதலைக்கு தமிழ்நாடு தலைவர்களின் பங்கு போற்றக்கூடியதாக உள்ளது. இவர்களை மறந்துவிட்டு தேசத்தின் வரலாற்றை எழுத முடியாது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களுக்கும், தேசத்திற்கும் போராடி வருகிறது. வாக்குக்காக மட்டும் இந்த இயக்கம் இல்லை. தேசத்திற்கான இயக்கம் என்பதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிரூபித்து வருகின்றது" என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"காங்கிரஸ் பேரியக்கம் கி.பி1885 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி துவங்கப்பட்டது. 140 ஆண்டுகள் கடந்து இந்திய மக்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம். எந்த நோக்கத்திற்காக தன் உயிரை நீர்த்து மதசார்பின்மையோடு இந்த தேசம் அமைய வேண்டும் என்று விடுதலை பெற்று தந்தார்களோ, அந்த தலைவர்கள் எல்லாம் தியாக தீபங்களாக இன்றும் இந்தியா முழுவதும் காட்சியளிக்கின்றார்கள்.
ஆனால் இப்பொழுது அரசியலில் அரசமைப்புச் சட்டத்தை சிதைத்து மதசார்பின்மையை சிதைத்து வருகிறார்கள். இங்கு யார் இருக்க வேண்டும் என்பதை ஒரு சாரார் தீர்மானிப்போம் என்கின்ற வகையில், பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை சிதைக்க வேண்டும் என்று தான் பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து பேசிய அவர், "தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை அளிக்கின்றது. தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் முழு கவனத்தை அரசு செலுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களுக்காக ஆதரவாக இருக்கோம் என்று கூற பாஜகவிற்கு எந்தவித தார்மீக பொறுப்பும் கிடையாது. அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது. போராட்ட களத்தை பற்றி பேசுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பாஜகவினர் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கியுள்ளனர்.
எந்த நோக்கத்திற்காக நாடு விடுதலை பெற்றதோ, தலைவர்கள் தியாகம் செய்தார்களோ அது எல்லாம் இன்றைக்கு நடக்கிறதா? என்பது கேள்விக்குறி தான். பாஜகவிற்கு போராட்டத்தை பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை கிடையாது. காங்கிரஸ் கட்சி எந்தவித தடுமாற்றமும் இன்றி நிற்கின்றோம். இன்னும் இரண்டு நாள்களில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்படும்" என்றார்.