கடல் நீர் உள்ளளவும் விஜயகாந்தின் புகழ் இருக்கும்; அமைச்சர் சேகர்பாபு
கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் விஜயகாந்தின் புகழ் இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பாடியில் உள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமான பணி மற்றும் படவேட்டம்மன் ஆலயத்தை உயர்த்தி கட்டும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கோவில் கட்ட பயன்படுத்தும் கருங்கற்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, கோவில் கட்டும் பணிகள் தாமதமாகி வருவதாக ஒப்பந்ததாரர்களை அழைத்து கடிந்து கொண்டார்.
மேலும், காலம் காலமாக இருக்கக் கூடியது கோயில்கள். அவற்றை கட்டுவதற்காக வாங்கப்படும் கற்களை ஆய்வு செய்தே வாங்க வேண்டும். மனிதர்களுக்கு வியாதி இருப்பதை போல் கற்களுக்கும் இருக்கும். எனவே கற்களை ஆய்வு செய்து வாங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.
கோவிலின் குடமுழுக்கு தேதியை முடிவு செய்துவிட்டு கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது கோயில் செயல் அதிகாரி கைலாசநாதர் கோயில் குறித்த தகவல்களை அமைச்சர் சேகர்பாபுவிடம் தவறாக எடுத்து கூறினார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு, 'செயல் அதிகாரியாக இருக்கும் உங்களுக்கே கோயில் குறித்த தகவல்கள் தெரியவில்லை' என்று கடிந்து கொண்டார்.
இந்த ஆய்வின் போது அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கோவில் அறங்காவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், ''விஜயகாந்தின் நினைவை என்னாலும், கலை உலகத்தாலும், அரசியல் உலகத்தாலும் மறக்க முடியாது. கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் விஜயகாந்த் புகழ் நினைவில் இருக்கும்'' என்றார்.