சரஸ்வதி நாகரிக கருத்தரங்கத்திற்கு எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கத்தினர் கைது
கோவையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளும் சரஸ்வதி நாகரிகம் கருத்தரங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், ‘சிந்து சரஸ்வதி நாகரிகம்’ எனும் கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று (டிச.19) நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
இந்நிலையில், சிந்து சமவெளி நாகரிகத்தை, சரஸ்வதி நாகரிகம் என மாற்றி வரலாற்றை திரித்து கருத்தரங்கம் நடப்பதாகவும், மாணவர்களிடையே தவறான தகவலை பரப்பி இந்துத்துவாவை திணிப்பதாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் முற்போக்கு இயக்கத்தினர் இணைந்து, சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், வரலாற்றில் சரஸ்வதி நாகரிகம் என்ற ஒன்றே இல்லை. சிந்து சமவெளி நாகரிகம் முதன்மையானதாகும் இருக்கும்பட்சத்தில் உண்மையை மறைக்கும் விதமாக கருத்தரங்கம் நடைபெறுகிறது என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், “கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் சிந்து சரஸ்வதி கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். இந்த கருந்தரங்கை தென்னிந்திய ஆய்வு மையம் நடத்துகிறது. இதில், தென்னிந்திய மொழிகளில் ஆய்வு நடத்தாமல், சமஸ்கிருதம் மற்றும் இந்தியில் நடத்தப்படுகிறது. இது திராவிட நாகரிகத்தை மறுத்து, வேத நாகரிகத்தை புகுத்தும் முயற்சியாகும்.
இதன் மூலம் கல்லூரியில் கல்வியை காவிமயமாக்குகின்றனர். தொடர்ந்து தமிழக ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் இதே பிரச்சாரத்தை செய்து வருகிறார். தமிழ்நாட்டிற்கும், தமிழர்களின் தொன்மையையும் அழிக்கும் வகையிலும், இல்லாத நாகரிகத்தை முற்படுத்தும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். எனவே, அரசு கல்லூரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்ட அனைத்து முற்போக்கு இயக்கத்தினரை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.