''அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத அன்புமணிக்கு என்னை நீக்க அதிகாரம் இல்லை'' - ஜி.கே.மணி ஆவேசம்
பாட்டாளி மக்கள் கட்சியில் எந்த வித பொறுப்பிலும் அல்லது அடிப்படை உறுப்பினராகவும் கூட இல்லாத அன்புமணியால் என்னை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும்? என்னை நீக்குவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.
சேலத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ''பாட்டாளி மக்கள் கட்சி என்றால் ராமதாஸ் மட்டும் தான். கட்சி ஆரம்பத்தில் இருந்து உடன் இருக்கிறோம். 46 ஆண்டு காலம் ராமதாஸ் உடன் பயணிக்கிறேன். 25 ஆண்டு காலமாக கட்சியில் தலைவராக இருக்கிறேன்.
இது போன்ற செய்தி வருகிறது என்றால் சிரிக்கிறதா? என்ன செய்வது? என்ன சொல்வது என தெரியவில்லை. மனித பண்பு உள்ள மனிதர்களுக்கு இது போன்ற சிந்தனைகள் வருமா? ஏற்கனவே அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கட்சியில் பொறுப்பிலும், பதவியிலும் அன்புமணி இல்லை. அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் இருக்கும் ஒருவர் என்னை எவ்வாறு கட்சியில் இருந்து நீக்க முடியும்? அன்புமணிக்கு யாரையும் நீக்குவதற்கு அதிகாரம் இல்லை. நீக்குவதற்கும், சேர்ப்பதற்கும், பொறுப்பு கொடுப்பதற்கும் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பொறுப்பு மற்றும் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் பாமக என்று பெயர் சொல்லவே முடியாது. எனது பெயரை, என் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்று பலமுறை ராமதாஸ் கூறுகிறார். இதற்கு மேல் என்ன அதிகாரம் தகுதியும் அன்புமணிக்கு இருக்கிறது?
இதனை பெரிதாகவும், பொருட்டாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியில் சேர வேண்டும் என்றால் ராமதாசை நேரில் சென்று பாருங்கள். அவர் சேர்த்துக் கொண்டால் கட்சியில் இருங்கள். சேர்ப்பாரா? என தெரியவில்லை. அன்புமணி என்பவர் மருத்துவம் படித்துக் கொண்டு இருந்தார். எப்போது கட்சிக்கு வந்தார்? எவ்வளவு நாட்களுக்கு முன்பாக வந்தார்? அவருக்கு முன்பு கட்சியில் இருக்கிறோம். இரவு, பகல் பாராமல் ராமதாசுடன் ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
மன வேதனையுடன், மனம் நொந்து சொல்கிறேன். அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சண்டை போட்டு வாதாடியவன் நான். எப்படி மத்திய அமைச்சராக ஆனீர்கள்? ஜி.கே.மணியால் தான் மத்திய அமைச்சர் ஆனதாக பேசி உள்ளீர்கள்.
ஆலமரம் எல்லாமே ராமதாசு தான். அவருடன் கருவியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அடிமட்ட தொண்டர் முதல் பொறுப்பாளர்கள் வரை ஜி.கே.மணி மீது குற்றச்சாட்டு வைக்கமாட்டார்கள். தற்போது பாமகவின் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரியும்.
பாமக வலிமையான கட்சி. தற்போது வலிமையே இல்லை என்று சொல்ல முடியுமா? தற்போது நிலைகுலைந்து போய்விட்டது.
அன்புமணி ஏன் இவ்வாறு செய்கிறார்? என்று அனைவரும் பேசத் தொடங்கி விட்டார்கள். ராமதாஸ் கூறுவதை கேளுங்கள்.
கூட்டணிப் பேச்சுவார்த்தை எந்த கட்சியுடனும் தொடங்கவில்லை. செயற்குழு, பொதுக்குழுக்கு முன்பாக நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நல்ல செய்தியை அறிவிப்பார். தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டு மாநிலங்களிலும் பாமக கட்சியினர் நடத்த உள்ள செயற்குழு, பொதுக்குழுவும் திட்டமிட்டபடி நடக்கும்' என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.