''தமிழ்நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் - பிரேமலதா விஜயகாந்த் முன்பு எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு
மக்களும் சரி, இளைஞர்களும் சரி தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பேசினார்.
பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் படக்குழுவினர் சரத்குமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், ''எனது இனிய நண்பர் கேப்டன் (விஜயகாந்த்) இன்று வரை உங்கள் நெஞ்சில் மட்டுமல்ல, என்னுடைய நெஞ்சிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். விஜயகாந்த் கண்ணில் நெருப்பு, வேகம் இருக்கும். அதே நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியன் கண்ணில் உள்ளது. படத்தின் போஸ்டரே இப்படத்தின் வீரத்தை சிறப்பாக காட்டுகிறது.
பொன்ராமிடம் பிடித்ததே வேகம், நகைச்சுவை தான் ஆனால் இந்தப்படத்தில் வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மாற்றம் என்பது மட்டும் மாறாது. அது எல்லா துறையிலும் இருக்கும். அரசியல், திரையுலகம் என அனைத்திலும் இருக்கும். எம்ஜிஆர், சிவாஜி அடுத்த தலைமுறை ரஜினி, கமல் அதன் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்களை மட்டும் யாரும் மாற்ற முடியாது, இது காலத்தின் கட்டாயம். அதே போல தான் தமிழ்நாட்டு மக்களும் சரி, இளைஞர்களும் சரி தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்'' என விஜயின் அரசியல் குறித்தும் அவர் மறைமுகமாக பேசினார்.