நேஷனல் ஹெரால்டு வழக்கில் முக்கிய திருப்பம் - அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் முக்கிய திருப்பம் - அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

2012 ஆம் ஆண்டு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்டுக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை யங் இந்தியன் லிமிடெட் கையகப்படுத்தியதில் சில காங்கிரஸ் தலைவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிக்கையை எதிர்க்கும் வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காங்கிரஸுக்கு நன்கொடை அளித்தவர்கள் ஏமாற்றப்பட்டதாக அமலாக்கத் துறை வாதிட்டது. கட்சிக்கு நன்கொடை அளித்த சிலருக்கு பின்னர் தேர்தல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்ற சோனியா காந்தி குடும்பத்தினரின் வாதத்தை அமலாக்கத் துறை வழக்கறிஞர் ராஜு எதிர்த்தார். AJL தான் நேஷனல் ஹெரால்டு நாளிதழின் வெளியீட்டாளராக இருந்தது என்று அவர் கூறினார்.

மேலும், ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ். சீமா, காங்கிரஸ் கட்சி AJL-ஐ விற்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றும், மாறாக அது சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் அதைக் காப்பாற்றவே முயன்றது என்றும் வாதிட்டார்.

AJL என்பது 1937-ல் ஜவஹர்லால் நேரு, ஜே.பி. கிருபளானி, ரஃபி அகமது கித்வாய் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களால் நிறுவப்பட்டது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

சோனியா காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அமலாக்கத்துறை பொய்யான குற்றச்சாட்டில் இந்த வழக்கை உருவாக்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார். நேஷனல் ஹெரால்டு கடனை ஏற்றுக் கொண்ட லாப நோக்கற்ற நிறுவனமான யங் இந்தியா நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கடன் இல்லாததாக மாற்றுவதற்காக மட்டுமே முயற்சி செய்தது என்று சிங்வி வாதிட்டார். பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கை, திடீர் அழுத்தம் காரணமாக அமலாக்கத் துறை தற்போது விரைவுபடுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீதான அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்குப்பதிவு செய்யாமல் ECIR என அழைக்கப்படும் அமலாக்கத் துறை தகவல் அறிக்கையை மட்டும் பதிவு செய்து கொண்டு பணமோசடி வழக்கில் விசாரணையை தொடங்க முடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

கடந்த மே 2-ம் தேதி இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. முன்னதாக அமலாக்கத் துறை ஏப்ரல் 15 அன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 44 மற்றும் 45 பிரிவுகளின் கீழ், சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.