விஜயகாந்த் - சரத்குமார் இடையிலான நட்பு மிக நெருக்கமானது... பிரேமலதா பேச்சு

விஜயகாந்த் - சரத்குமார் இடையிலான நட்பு மிக நெருக்கமானது... பிரேமலதா பேச்சு

விஜயகாந்த் - சரத்குமார் இடையிலான நட்பு மிக நெருக்கமானது என்று பிரேமலதா  விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் படக்குழுவினர் சரத்குமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இங்கு இருக்கும் அனைவரையம் நான் கேப்டனை திருமணம் செய்த நாளில் இருந்து எனக்கு தெரியும். யுவன் சங்கர் ராஜா பிறந்ததிலிருந்து எனக்கு தெரியும். பிரபாகரன், சண்முக பாண்டியன் போல எனக்கு யுவனும் ஒரு மகன் போலத் தான். விஜயகாந்த் - சரத்குமார் இடையிலான நட்பு மிக உண்மையானது, நெருக்கமானது. அந்த வகையில், நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்ற போது விஜயகாந்திற்கு பக்க பலமாக நின்றவர் சரத்குமார்'' என்றார்.

இயக்குநர் பொன்ராம் பேசுகையில், ''மூன்றாண்டுகளுக்கு முன்னதாக முதல்முறையாக சண்முக பாண்டியனை நேரில் பார்த்தேன். அவரைப் பார்க்கும் வரையில் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்கு இல்லை. பார்த்த பிறகாக இவருக்கு ஒரு திரைப்படம் நிச்சயமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவரை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்காக ஒரு பாடல் காட்சி எடுப்பதற்காக வைகை அணை அருகே சென்ற போது, அங்கு நான் பார்த்த காட்சிகளை வைத்து தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன்.

வலியான கதையில் காமெடியை எப்படி பொருத்துவது என்று யோசித்தேன். இருப்பினும் அதுதான் என்னுடைய தனித்துவம். அந்த வகையில் இதில் சிறப்பான முறையில் காமெடியானது இருக்கிறது. படத்தில் பல காட்சிகளில் கதாநாயகன் சண்முகபாண்டியனை அவரது அப்பாவை பார்ப்பது போல உணர்ந்தேன்'' என்றார்.

படத்தின் நாயகன் சண்முக பாண்டியன் பேசுகையில், ''அப்பாவோட நெருங்கிய நண்பர் சரத்குமார். இந்த படத்தில் எனக்கும் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் பணியாற்றியது என்னை தவிர எந்த நடிகரும் கிடையாது என்று நினைக்கிறேன். அந்த வகையில் நான் பாக்கியசாலி என்று கருதுகிறேன்.'' என்றார்.