கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குநர் அறிவிப்பு

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குநர் அறிவிப்பு
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவரத்தி இயக்க உள்ளதாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தை கமல்ஹசானின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டு அது தொடர்பாக அறிவிப்பு வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
பின்னர் இந்த படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்தார். படத்தின் ஹீரோவான ரஜினிகாந்த்துக்கு பிடித்த கதை வரும் வரை காத்திருப்பேன் என தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறினார். பின்னர் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் மூலம் கவனம் பெற்ற அஷ்வத் மாரிமுத்து, மகாராஜா படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன்.. டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் ரஜினிகாந்த் கதை கேட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.