காலணி வீசியதால் அதிர்ச்சி: தலைமை நீதிபதி கருத்து

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு கடந்த திங்கட்கிழமை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது. அப்போது ராகேஷ் கிஷோர் என்ற 71 வயது வழக்கறிஞர் திடீரென தனது காலணியை தலைமை நீதிபதியை நோக்கி வீசி தாக்க முயன்றார். உடனே நீதிமன்ற காவலர்கள் பாய்ந்து சென்று அவரை பிடித்து அங்கிருந்து வெளியேற்றினர்.
இருப்பினும், “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னை பாதிக்காது” என்று கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களை தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று கூறும்போது, “அந்த சம்பவத்தால் நானும் எனது சக நீதிபதியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களை பொறுத்தவரை அது ஒரு மறந்துபோன அத்தியாயம்” என்றார். எனினும் அருகில் இருந்த சக நீதிபதி உஜ்ஜல் புயான், ``இது நீதிமன்ற அமைப்பு மீதான தாக்குதல்'' என்று கண்டனம் தெரிவித்தார்.