துணைவேந்தர்கள் நியமன மசோதா; 3 ஆண்டுகளுக்குப் பின் திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர்
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று திருப்பி அனுப்பியுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் அப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, துணை வேந்தர்களை மாநில அரசு தேர்வு செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் கொண்ட அந்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்கும் வகையில் 13 பல்கலைக்கழகங்களின் சட்டங்களிலும் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதில் சென்னை பல்கலைக்கழகத்தின் தனி மசோதாவும் மற்றும் மற்ற 12 பல்கலைக்கழகங்களுக்கு பொதுவான மசோதாவும் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா குறித்து அப்போது சட்டப் பேரவையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ''உயர் கல்வியில் மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலை தூக்கியிருக்கிறது. துணை வேந்தர்கள் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால், அது சர்ச்சைக்கு வித்திடும். ஆளுநர் - மாநில அரசுக்கு இடையே அதிகார மோதல் ஏற்படும். துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், மாநில அரசு தான் துணை வேந்தர்களை நியமிக்கிறது. இதே நிலை தான் கர்நாடகா, தெலங்கானாவிலும் உள்ளது'' என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று திருப்பி அனுப்பியுள்ளார்.