டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகள்: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பூடான் பவுலர்

டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகள்: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பூடான் பவுலர்

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் ஒரே போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் வீரர் என்ற சாதனையை பூடான் அணியின் சோனம் யேஷே படைத்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நாளுக்கு நாள் பேட்டர்கள் அசுர வளர்ச்சியைக் கண்டு வரும் சூழ்நிலையில், பவுலர்களின் நிலை பரிதாப எல்லைக்கு சென்று வருகிறது. காரணம் பேட்டர்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசி வருகின்றனர். இதனால் பவுலர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த தவறி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஒரு பந்து வீச்சாளர் ஒரு போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைத்துள்ளது தற்சமயம் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. அந்த வீரர் பூடானைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சோனம் யேஷே. இவர் சமீபத்திய மியான்மர் அணிக்கு எதிரான போட்டியில் தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதன்படி, இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பூடான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்களைச் சேர்த்திருந்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மியான்மர் அணி 9.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 45 ரன்களில் ஆல் அவுட்டானது.

இந்த இன்னிங்ஸில் பூடான் அணி சார்பில் 4 ஓவர்களை வீசிய சோனம் யேஷே ஒரு மெய்டன் உள்பட 7 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியாதே சாதனையாக இருந்த நிலையில், அதனை சோனம் யேஷே முறியடித்துள்ளார்.

இதற்கு முன் மலேசியாவின் சியாஸ்ருல் இட்ரஸ் கடந்த 2023ஆம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போட்டியிலும், பஹ்ரைனின் அலி தாவூத் இந்த ஆண்டு பூட்டானுக்கு எதிராகவும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது யேஷே 8 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய வரலாறைப் படைத்துள்ளார்.