பாஜக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைய வாய்ப்பே இல்லை - துரை வைகோ
தவெக தலைவர் விஜய் பாஜகவை மதவாத சக்தி என்றும் கொள்கை எதிரி என்றும் கூறி வருவதால், அவர் அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என துரை வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மதிமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆண்டனி மிலார்டு இல்ல திருமண விழா நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. இதில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக கூட்டணி, தவெக, எஸ்ஐஆர் உள்ளிட்ட தற்போதைய பரபரப்பான விவகாரங்கள் குறித்து பேசினார்.
துரை வைகோ பேசுகையில், ''தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் வளா்ந்து விடக்கூடாது. சாதி, மத மோதல்கள் ஏற்படக்கூடாது என 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருறோம். மதிமுக எத்தனை சீட்டுகளில் பேட்டியிட வேண்டும் என்பதை தலைமை முடிவெடுக்கும். உரிய எண்ணிக்கைகான சீட்டு எங்களுக்கு திமுக வழங்கும். திமுக கூட்டணியுடன் நீடிக்க வேண்டும் என உறுதியாக உள்ளோம். வேறு எந்த கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா? என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
'அதற்கு வாய்ப்பு இல்லை...'
தமிழ்நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன. அதனை மேற்கொண்டும் வளர விடக் கூடாது என்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளாக நாங்கள் இணைந்து உள்ளோம். ஜனநாயக சக்திகள் இணைந்து, மதவாத சக்திகளை அழித்து தேர்தலில் வெற்றி பெறுவோம்.
தவெக தலைவர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். அவர் மதவாத சக்திகளை எதிர்க்கிறார். விஜய் அறியாமலேயே மதவாத சக்திகளுக்கு உதவிடக் கூடாது. மதவாத சக்திகளுக்கு எதிராக திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. தவெக தலைவர் விஜய் பாஜக - அதிமுக கூட்டணியில் இணைய மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர் பாஜகவை மதவாத சக்தி என்றும், கொள்கை எதிரி என்றும் விமர்சித்து வருகிறார்.
'எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கவில்லை...'
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் முத்திரை பதிப்போம், ஆட்சி மாற்றம் வரும் என கூறி வருகிறார். இது பாஜகவினரை உற்சாகப்படுத்தும் செயல் மட்டுமே. சமீபத்தில் நடந்து முடிந்த எஸ்ஐஆர் கணக்கெடுப்பு முடிவில் 97 லட்சம் வாக்காளர்கள் தமிழகத்தில் நீக்கப்பட்டு உள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதில் தகுதியான வாக்காளர்களும் நீக்கப்பட்டு உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எஸ்ஐஆர்-ஐ நாங்கள் எதிர்க்கவில்லை, அதை எப்படி அமல்படுத்துகிறார்கள் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகளாக செய்ய வேண்டிய அந்த வேலையை இரண்டு மாதத்திற்குள் செய்து முடிக்கிறார்கள் என்றால் அதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
தகுதியான வாக்காளர்கள் இடம்பெற வேண்டும், தகுதி இல்லாதவர்கள் நீக்கப்பட வேண்டும், ஆனால் அதற்கு மாறாக தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படுவதும், தகுதி இல்லாதவர்கள் உள்ளே சேர்ப்பதும் தான் தற்போது பல மாநிலங்களில் நடந்து உள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் போது தான் இதில் என்ன குளறுபடி ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வரும். இது அவர்களுக்கு சாதாரணமாக கூட இருக்கலாம், இப்படி குறுக்கு வழியில் ஏதாவது ஆட்சி மாற்றத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் கூட உள்துறை அமைச்சருக்கு இருக்கலாம்.'' என தெரிவித்தார்.