ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஹவுரா வந்தே பாரத் ரயிலில் இனி அசைவ உணவு
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா வரையில் படுக்கை வசதி கொண்ட, நாட்டின் முதல் வந்தே பாரத் ரயிலை கடந்த 17ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அசைவ உணவும் விநியோகிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கிழக்கு ரயில்வே அதிகாரிகள் நேற்று கூறும்போது, "பயணிகளின் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரம் முதல் ஹவுரா- காமாக்யா வந்தே பாரத் ரயில் மெனுவில் அசைவ உணவும் சேர்க்கப்படும். விருப்பப்படும் பயணிகள் அசைவ உணவை பெறலாம்.
அதில், காமாக்யாவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் அசாம் உணவு வகைகள் இடம்பெறும். அதேபோல் ஹவுராவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் மேற்கு வங்க உணவு வகைகள் இடம்பெறும்" என்றனர். இதில் இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகள் இடம்பெற உள்ளன.